தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'ஏ' பிரவில் தனது முதல் ஆட்டத்தில் சற்று தள்ளாடி செனகலை வென்றது நெதர்லாந்து. எனினும், ஆட்டத்தில் அவ்வப்போதுதான் அதன் ஆற்றல் வெளிப்பட்டது. போட்டி தொடரத் தொடர நெதர்லாந்து மேம்படக்கூடும் என்ற உணர்வு அந்த ஆட்டத்தில் இருந்தது.
'ஏ' பிரிவில் இன்று எக்குவடோருடன் மோதுகிறது நெதர்லாந்து. கத்தாருக்கு எதிரான முதல் ஆட்டத்தில் எக்குவடோர் மிகச் சிறப்பாக விளையாடியது. அதை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆட்டமே இப்போட்டியில் நெதர்லாந்து எதிர்கொள்ளவிருக்கும் முதல் சவால் என்று சொல்லலாம்.
நெதர்லாந்து அணியால் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றமுடியும் என்று அதன் பயிற்றுவிப்பாளர் லூயி வேன் ஹால் கூறியிருந்தார். அதற்கு ஏற்றவாறு வரலாற்றில் முதன்முறையாக நெதர்லாந்து கிண்ணத்தைக் கைப்பற்ற அணி பெரிதும் மேம்படவேண்டும்.
"எக்குவடோர் சவாலான எதிரணி. எக்குவடோர், செனகலைவிட நன்கு திட்டமிட்டு விளையாடும் ஆற்றல்கொண்ட அணி என்பது எனது கருத்து. ஆட்டம் சவாலானதாக இருக்கும்," என்றார் 71 வயது வேன் ஹால்.
கத்தாருக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது எக்குவடோர். அதில் இரண்டு கோல்களையும் போட்ட பிறகு காயமுற்ற அணித் தலைவர் எனர் வலென்சியா, நெதர்லாந்துக்கு எதிராகக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தில் வெல்லும் அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதி.
இன்றைய மற்றோர் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் கத்தாரும் செனகலும் சந்திக்கின்றன. 2002ஆம் ஆண்டுப் போட்டியில் நடப்பு வெற்றியாளர்கள் பிரான்சை வென்றதோடு காலிறுதிச் சுற்றுவரை சென்ற செனகல் அதற்குப் பிறகு அதிகம் சோபிக்கவில்லை. கத்தாரை வென்றால் அந்தப் போக்கை மாற்றுவதற்கான வாய்ப்பு அமையும்.
உலகக் கிண்ணக் காற்பந்தில் சரியாக அறிமுகமாக கத்தார் விட்டுக்கொடுக்காமல் விளையாடி ஆட்டத்தில் வெற்றி காணவேண்டும். உயர்தரக் காற்பந்துச் சூழலில் கத்தாரால் போட்டியிடமுடியும் என்பதை இன்றைய ஆட்டத்தில் அணி நிரூபிக்கவேண்டும் என்றார் பயிற்றுவிப்பாளர் ஃபீலிக்ஸ் சாஞ்செஸ்.

