செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

வெற்றியாளர்களைக் கணிக்கும் விலங்குகள்

தோக்கியோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் ஆட்டங்களில் எந்த அணிகள் வெல்லும் என்பதை விலங்குகள் தேர்ந்தெடுப்பது அண்மைக் காலமாக வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் ஜெர்மனியும் ஜப்பானும் மோதிய 'இ' பிரிவு ஆட்டத்தில் ஜப்பான்தான் வெல்லும் என்பதை சரியாகக் கணித்தது டாயோ என்ற பெயரைக் கொண்ட நீர்நாய் (படம்).

மற்ற சில விலங்குகளும் இவ்வாறே வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கின. எனினும், அவற்றின் கணிப்பு சரியாக அமையவில்லை.

மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொண்ட ஜப்பான் வீரர்கள்

அல் ரயான்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிகண்ட பிறகு விளையாட்டாளர்கள் ஆட்டத்திற்கு முன்பும் பின்பும் கூடும் அறையை மிகவும் சுத்தமாக வைத்திருந்தனர் ஜப்பான் அணியின் வீரர்கள் (படம்: அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் / டுவிட்டர்).

அந்த ஆட்டம் கலிஃபா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அரங்கிலுள்ள அறையைச் சுத்தமாக வைத்தது மட்டுமின்றி அதிர்ஷ்டத்தையும் நீண்ட ஆயுளையும் குறிக்கும் தாளால் உருவாக்கப்பட்ட 'ஒரிகாமி' படைப்புகளையும் ஜப்பானிய விளையாட்டாளர்கள் விட்டுச் சென்றனர்.

சவூதி அரேபியாவின் அல்-ஷஹ்ரானி:

நான் நலமாக இருக்கிறேன்

தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆ்டடத்தில் மோசமாகக் காயமுற்றார் சவூதி அரேபியாவின் யாசர் அல்-ஷஹ்ரானி. அதைத் தொடர்ந்து அவர் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற அந்த ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் காயமுற்று பல நிமிடங்களுக்குத் திடலில் சிகிச்சை பெற்றார் 30 வயது அல்-ஷஹ்ரானி. முகத்தின் சில பகுதிகளில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அல்-ஷஹ்ரானி அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தான் நலமாக இருப்பதாக அவர் ரசிகர்களிடம் மறுவுறுதிப்படுத்தியுள்ளார்.