அல் வாக்கிரா: நேற்று மாலை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'ஜி' பிரிவு ஆட்டத்தில் கெமரூனை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது சுவிட்சர்லாந்து. ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டவர் கெமரூனில் பிறந்து சுவிட்சர்லாந்தில் வளர்ந்த பிரீல் எம்போலா.
பிறந்த நாட்டிற்கு அவமரியாதை செய்வதைத் தவிர்க்க கோல் போட்ட பிறகு கொண்டாடவில்லை எம்போலோ. அதற்குப் பதிலாக அவர் கெமரூனிடம் மன்னிப்புப் கேட்கும் விதத்தில் கைகளை உயர்த்தியபடி நின்றார்.
ஆட்டத்தில் அதிக விறுவிறுப்பு இல்லாவிட்டாலும் வெற்றி பெறுவதற்குத் தேவையானவற்றைக் கச்சிதமாகச் செய்தது சுவிட்சர்லாந்து.
1990ஆம் ஆண்டுப் போட்டியில் காலிறுதிச் சுற்றுவரை முன்னேறிய கெமரூன் அதற்குப் பிறகு முதல் சுற்றைத் தாண்டியதில்லை. அதை மாற்றுவதற்கான அணியின் முயற்சியில் இந்தத் தோல்வி பின்னடைவாக அமைந்துள்ளது.
அடுத்ததாக வரும் திங்கட்கிழமையன்று கெமரூன், செர்பியாவைச் சந்திக்கும். அதே நாளில் சுவிட்சர்லாந்து, பிரேசிலுடன் மோதும்.

