தோஹா: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி ஒரு நிலை அதற்கு ஏற்படும் என யாரும் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
'சி' பிரிவில் இடம்பெறும் அர்ஜெண்டினா, அதன் முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவுடன் மோதியது.
இந்த ஆட்டத்தை அர்ஜெண்டினா எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. 2-1 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினா அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், சிங்கப்பூர் நேரப்படி இன்று பின்னிரவு 3 மணிக்கு மெக்சிகோவை அர்ஜெண்டினா சந்திக்கிறது.
லயனல் மெஸ்ஸியின் (படம்) தலைமையிலான அர்ஜெண்டினாவின் உலகக் கிண்ணப் பயணம் தொடர வேண்டுமேயானால் இன்றைய ஆட்டத்தில் அது தோல்வியைத் தவிர்க்க வேண்டும். தோல்வியின் பிடியில் சிக்கினால் முதல் சுற்றிலேயே அது போட்டியிலிருந்து வெளியேறி
விடும். மெக்சிகோவிடம் தோல்வி அடையும் பட்சத்தில், பிறகு போலந்தை வீழ்த்தி மூன்று புள்ளிகள் பெற்றாலும் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற போதுமான புள்ளிகளைப் பெற முடியாத நிலை அர்ஜெண்டினாவுக்கு ஏற்பட்டுவிடும். மெக்சிகோ அதன் முதல் ஆட்டத்தில் கோல் ஏதும் போடாமல் போலந்துடன் சமநிலை கண்டது.
எனவே, அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் எப்படியும் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெறும் முனைப்புடன் அது களமிறங்கும்
என்பதில் சந்தேகமில்லை.
இன்றிரவு 9 மணிக்கு 'சி' பிரிவில் உள்ள சவூதி அரேபியாவும் போலந்தும் பொருதுகின்றன.
அர்ஜெண்டினாவைத் தோற்கடித்த பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் சவூதி, தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற தயாராக உள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு 'டி' பிரிவில் இடம்பெறும் துனீசியாவும்
ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.
ஆஸ்திரேலியா அதன் முதல் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான பிரான்ஸிடம் 4-1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.
இன்றைய ஆட்டத்திலும் தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலியாவின் கதை முடிவுக்கு வந்துவிடும்.
அதே சமயம் முதல் ஆட்டத்தில் டென்மார்க்கிற்கு எதிராக கோல் ஏதும் போடாமல் சமநிலை கண்ட துனீசியா, இம்முறை கோல் பசியுடன் வெற்றிக்குக் குறிவைத்துள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு
வலிமைமிக்க பிரான்சை எதிர்த்து டென்மார்க் களமிறங்குகிறது.
பிரான்சுக்கு எதிராக டென்மார்க் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கோல் மழை பொழியும் ஆற்றல் கொண்ட பிரெஞ்சுக் குழு, அதன் இரண்டாவது ஆட்டத்திலும் வாகை சூடி அடுத்த சுற்றுக்குள் நுழையும் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
இருப்பினும், காற்பந்தாட்டாங்களில் என்ன நடக்கும் என்பது யாராலும்
முன்னுரைக்க முடியாது என்பதால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

