தோஹா: பிரேசில் அதன் உலகக் கிண்ணப் பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற 'ஜி' பிரிவு ஆட்டத்தில் செர்பியாவை அது 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
கடந்த சில உலகக் கிண்ணப் போட்டிகளில் சோபிக்காத பிரேசில், இம்முறை அதன் பழைய பெருமைகளை நினைவூட்டும் வகையில் விளையாடியது.
உலகக் கிண்ணத்தை ஐந்து முறை ஏந்தியிருக்கும் பிரேசில், முற்பாதி ஆட்டத்தில் கோல்
வேட்டையில் தீவிரம் காட்டியது.
இருப்பினும், இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது.
பிற்பாதி ஆட்டத்தில் பிரேசிலின் கையோங்கியது. ஆட்டத்தின் 62வது நிமிடத்தில் பிரேசிலின் வினிஷியஸ் ஜூனியர் அனுப்பிய பந்தை செர்பிய கோல்காப்பாளர் தட்டிவிட்டார்.
இருப்பினும், செர்பியத் தற்காப்பு ஆட்டக்காரர்கள் பந்தை நெருங்குவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் முந்திச் சென்ற ரிச்சார்லிசன் அதை வலைக்குள் சேர்த்தார். பிரேசிலிய ரசிகர்கள் கொண்டாடி முடித்த சில நிமிடங்களில் பிரேசிலின் வெற்றியை உறுதி செய்த இரண்டாவது கோல் புகுந்தது.
இந்த கோலையும் ரிச்சார்லிசன் போட்டார். அவர் கோல் போட்ட விதம் விளையாட்டரங்கத்தில்
மட்டுமல்ல, உலகெங்கும் தொலைக்காட்சி மூலம் ஆட்டத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் ரிச்சார்லிசன் போட்ட 'ஓவர்ஹெட் சிசர் கிக்' கோல், இந்த உலகக் கிண்ணப் போட்டியின் ஆகச் சிறந்த கோல்கள் பட்டியலில் இடம்பெறுவது உறுதி.
உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில்
பிரேசில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பதிவு செய்வது வழக்கம். தங்கள் அபிமான குழு மீண்டும் காலிறுதி, அரையிறுதிச் சுற்றுகள் வரை சென்று, கிண்ணத்தை நெருங்கும் நேரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல் மீண்டும் தோற்று வெளியேறிவிடுமோ என்ற பதைபதைப்பு பிரேசில் ரசிகர்களிடையே நிலவுகிறது. 2014ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் அரையிறுதி வரை சென்ற பிரேசில், ஜெர்மனியிடம் 7-1 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது, காற்பந்து ரசிகர்களின் மனதில் இன்னமும் நிழலாடுகிறது.
2018ஆம் ஆண்டில் காலிறுதி வரை சென்ற பிரேசில், 2-1 எனும் கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் சுருண்டது.
ஆனால் இம்முறை மீண்டும் தடம் பதிக்கும் முனைப்புடன் இருக்கிறது பிரேசில் அணி. களமிறங்கும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தும் இலக்குடன் உள்ளது.