கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினாவை வென்ற சவூதி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் சவூதியின் அரச குடும்பத்தார் 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை பரிசளிக்கவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஆனால், அது உண்மையில்லை என்று சவூதி பயிற்றுவிப்பாளர் ஹெர்வ் ரினார்ட் கூறியுள்ளார்.
"இதுவரை ஓர் ஆட்டம் மட்டுமே விளையாடியுள்ளோம். இன்னும் இரு முக்கிய ஆட்டங்கள் உள்ளன. எனவே நாங்கள் தன்னடக்கத்துடன் விளையாட வேண்டும். அவ்வாறு விளையாடவில்லை என்றால், எங்களால் சிறப்பாக செயல்பட இயலாது," என்றார் பிரெஞ்சு நாட்டவரான அவர்.
சவூதி வீரர்கள் கத்தாரிலிருந்து நாடு திரும்பியவுடன் சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அவர்களுக்கு 'ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம்' காரை பரிசளிப்பார் என ஊடகத் தகவல்கள் கூறின. இந்த காரின் சந்தை மதிப்பு ஏறக்குறைய 500,000 யூரோ எனச் சொல்லப்படுகிறது.
இதுவரை இருமுறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள அர்ஜெண்டினாவை 2-1 எனும் கோல் கணக்கில் சவூதி தோற்கடித்தது. அர்ஜெண்டினாவின் இந்த தோல்வியை உலகக் கிண்ண வரலாற்றிலேயே பெரும் அதிர்ச்சி தரும் நிகழ்வாக பலரும் கருதுகின்றனர்.
ஃபிஃபா உலகத் தரவரிசைப் பட்டியலில் அர்ஜெண்டினாவைவிட 48 இடங்களுக்குக் கீழே சவூதி உள்ளது. நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள அர்ஜெண்டின அணி, சவூதியை எளிதில் தோற்கடிக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதுவும், நடப்பு உலகக் கிண்ணப் போட்டியை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக அர்ஜெண்டினா கருதப்பட்டு வந்தது.
சவூதி உடனான ஆட்டத்திற்கு முன்பாக அர்ஜெண்டினா மூன்றாண்டுகளாக தோல்வியைச் சந்திக்கவே இல்லை. ஒப்புநோக்க, இதற்கு முன்பு மூன்றே மூன்று உலகக் கிண்ண ஆட்டங்களில் மட்டுமே சவூதி வென்றிருந்தது.
ஆனால், சவூதியின் இந்த எதிர்பாராத வெற்றியால் உலகக் கிண்ணத்தை வென்றுவிட்டதுபோல சவூதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.