உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 'சி' பிரிவின் தொடக்க ஆட்டத்தில் அர்ஜெண்டினாவைத் தோற்கடித்து அதிர்வலைகளை ஏற்படுத்திய சவூதி அரேபிய அணி, இன்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தது.
முதல் ஆட்டத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பதிவுசெய்த சவூதி அணியினர் மீதே அனைவரது கவனமும் இருந்தது.
போலந்து உடனான ஆட்டத்தை முழுவதுமாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஆட்ட முடிவு சவூதியின் முயற்சியைப் பிரதிபலிக்கவில்லை என்பதை உணர்வீர்.
ஆட்டத்தின் பல தருணங்களில் கோல் போடும் முயற்சியை சவூதி வீரர்கள் முன்னெடுத்தபோதிலும் அவற்றையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்தார் போலந்து கோல்காப்பாளர்.
ஆட்டத்தின் முற்பாதியில் 1-0 எனும் கோல் கணக்கில் பின்னால் இருந்த சவூதி, இடைவேளைக்கு முன்பு கிடைத்த பெனால்டி வாய்ப்பை நழுவவிட்டது. பெனால்டியில் சவூதி கோல் போடும் முயற்சியை போலந்து கோல்காப்பாளர் தடுத்துவிட்டார்.
விட்டதைப் பிடித்து ஆட்டத்தின் பிற்பாதியில் சமநிலையாவது காண சவூதி வீரர்கள் தங்கள் தாக்குதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். என்றாலும், அவர்களது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை.
ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் போலந்துக்கு ஒரு கோலை சவூதி தற்காப்பு ஆட்டக்காரர் இலவசமாக வழங்கிவிட்டார். சக வீரரிடமிருந்து தம்மை நோக்கி வந்த பந்தை அவர் கட்டுப்படுத்த தவறிவிட்டார். இதைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட போலந்து வீரர் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி, பந்தைக் காலால் தட்டி எளிதில் கோல் போட்டார்.
'சி' பிரிவில் அடுத்ததாக மெக்சிகோவை சவூதி சந்திக்கிறது. அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பெற, அதில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் சவூதி உள்ளது.