அல் கோர்: உலகக் காற்பந்தின் ஆகச் சிறந்த இரு அணிகளாகக் கருதப்படும் ஸ்பெயினும் ஜெர்மனியும் இன்று மோதவுள்ளன. உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'இ' பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் சந்திக்கின்றன.
பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகக் கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ளது ஜெர்மனி. 2010ஆம் ஆண்டில் முதன்முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின். எனினும், அப்போதிருந்தே ஸ்பெயின் தொடர்ந்து உலகின் மாபெரும் அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்துள்ளது.
எனினும், 2014ஆம் ஆண்டுப் போட்டியிலிருந்து பழைய துடிப்பை இழந்திருந்தது. இருந்தாலும் இதர அணிகளை அச்சுறுத்தும் வீரர்கள் என்றுமே ஸ்பெயினிடம் உண்டு.
இவ்வாண்டின் போட்டியில் பல புதிய, இளம் நட்சத்திரங்களுடன் மாறுபட்ட வடிவில் களமிறங்கியுள்ளது ஸ்பெயின். நவீன உத்திகள், தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தனது செல்லப் பிள்ளைகளுக்குப் பயிற்சியளித்துள்ளார் பயிற்றுவிப்பாளர் லூயி என்ரிக்கே.
பயிற்சியின்போது விளையாட்டாளர்களின் சட்டையில் பொருத்தப்படும் ஒலிவாங்கியின் மூலம் அவர்களைத் தொடர்புகொள்வது உள்ளிட்ட தொழில்நுட்ப முறைகளை என்ரிக்கே உபயோகிக்கிறார்.
பயிற்சி முறையில் மட்டுமின்றி விளையாட்டிலும் ஸ்பெயின் புத்துயிர் பெற்றிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் கோஸ்டா ரிக்காவை 7-0 எனும் கோல் கணக்கில் சுக்குநூறாக்கியது இதற்குச் சான்று. வளர்ந்துவரும் இளம் வீரர்களின் துடிப்புடன் மின்னும் ஸ்பெயினைக் கவனமாக எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது, தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானிடம் அதிர்ச்சி தோல்விகண்ட ஜெர்மனி. தன்னம்பிக்கையின் உச்சியில் உற்சாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது ஸ்பெயின். முதல் ஆட்டத்தில் செய்த தவறுகளைத் தவிர்த்து தோல்வியடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய சூழலில் இருக்கிறது ஜெர்மனி. காரணம், தோல்வியடைந்தால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட அறவே போய்விடும்.
எனினும், உலகக் கிண்ணத்தை நான்கு முறை வென்றுள்ள ஜெர்மனியைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது எந்த அணியும் அறிந்த ஒன்று.
உலகக் கிண்ணம் 2022: உலகக் காற்பந்தின் தூண்கள் மோதும் ஆட்டம்

