அல் ரயான்: இந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு முன்பே 'இ' பிரிவுதான் ஆகச் சவாலானதாகக் கருதப்பட்டது. ஸ்பெயின், ஜெர்மனி இரண்டும் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளது அதற்குக் காரணம்.
இந்தப் பிரிவிலிருந்து ஜப்பான் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிலை இப்போது மாறிவிட்டது.
முதல் ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் ஜெர்மனியை வென்று தனது ரசிகர்களை ஆனந்த மழையில் நனையச் செய்தது ஜப்பான். அதைத் தொடர்ந்து ஜப்பான் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
முற்பாதியில் ஜெர்மனியை எதிர்கொள்ளமுடியாமல் திணறிய ஜப்பான் விட்டுக்கொடுக்காமல் ஆடி வெற்றியடைந்தது. 1-0 எனும் கோல் கணக்கில் பின்னணியில் இருந்த அது 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது. டாக்குமோ அசானோ (படம்) வெற்றி கோலைப் போட்டார்.
ரஷ்யாவில் நடைபெற்ற சென்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஜப்பான் இரண்டாம் சுற்றுவரைச் சென்றது. பல நட்சத்திரங்களைக் கொண்ட பெல்ஜியத்துக்கு எதிரான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்தும் 3-2 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அந்த ஆட்டத்தை வென்றிருந்தால் உலகக் கிண்ண வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றிருக்கும் ஜப்பான்.
இவ்வாண்டின் போட்டியில் அணியில் பல புதிய விளையாட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 19 ஜப்பானிய வீரர்கள் முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கின்றனர். தற்காப்பு ஆட்டக்காரர் மாயா யொஷிடா, மாற்று கோல் காப்பாளர் எய்ஜி காவாஷிமா உள்ளிட்டோர் மட்டும் அணியில் உள்ள வயதான விளையாட்டாளர்கள்.
புத்துயிர் பெற்றுள்ள இந்த ஜப்பான் அணி, ஜெர்மனியை வென்றதுடன் நின்றுவிடாமல் தொடர் இன்ப அதிர்ச்சிகளை வழங்கும் நோக்குடன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜெர்மனிக்கு எதிராக ஆடியதுபோல் மனவுறுதியுடன் விளையாடினால் எதுவும் சாத்தியம்.

