செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ஜப்பான் ரசிகர்களுக்கு விருது

தோஹா: ஜப்பானிய காற்பந்து ரசிகர்களுக்கு அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் விருது வழங்கியுள்ளது.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் ஆட்டங்கள் நிறைவடைந்த பிறகு ஜப்பான் ரசிகர்கள் குப்பையை அகற்றி விளையாட்டரங்குகளை சுத்தம் செய்தனர். அதை கௌரவிக்க அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

போட்டியின் முதல் ஆட்டத்தில் எக்குவடோரும் கத்தாரும் மோதின. ஆட்டம் முடிந்த பிறகு அரங்கில் இருந்த ஜப்பானிய ரசிகர்கள் குப்பையை அகற்றியது பலரால் பெரிதும் பாராட்டப்பட்டது.

ஜெர்மனிக்கு எதிரான ஆட்டம் முடிந்தவுடன் விளையாட்டாளர்கள் ஒன்றுகூடும் அறையை ஜப்பானிய வீரர்கள் சுத்தம் செய்ததும் அதிகம் பேசப்பட்ட ஒரு நடவடிக்கை.

நெய்மாருக்குக் காயம்

தோஹா: காயமடைந்துள்ள பிரேசில் நட்சத்திரம் நெய்மார் (படம்) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 'ஜி' பிரிவில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான தனது அணியின் அடுத்த ஆட்டத்தில் இடம்பெறமாட்டார். கெமரூனுக்கு எதிரான பிரேசிலின் கடைசி 'ஜி' பிரிவு ஆட்டத்திலும் நெய்மார் விளையாடாமல் போக வாய்ப்புள்ளது.

செர்பியாவுக்கு எதிரான பிரேசிலின் முதல் ஆட்டத்தில் நெய்மாரின் கணுக்காலில் காயமடைந்தது. அதைத் தொடர்ந்து ஆட்டத்திலிருந்து வெளியேறிய அவர் கவலையில் அழுதுகொண்டிருந்தது காணொளியில் பதிவானது.

முன்னதாக 2014ஆம் ஆண்டுப் போட்டியிலும் நெய்மார் ஒரு கட்டத்தில் காயமடைந்தார். அவரின் இழப்பு பிரேசிலுக்குப் பெரும் பிரச்சினையாக அமைந்தது.

எனினும், தற்போதைய நிலவரப்படி கோல்களைப் போட பிரேசில் முன்பைப் போல் நெய்மாரை அதிகம் சார்ந்திருக்கவில்லை என்று செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது வர்ணனையாளர் குறிப்பிட்டார். அந்த ஆட்டத்தில் பிரேசில் மிகவும் அபாரமாக விளையாடியது.

இங்கிலாந்துமீது பல தடை

உத்தரவுகள் விதிக்கப்பட்டிருக்கலாம்

தோஹா: உலகக் கிண்ணப் போட்டியின் ஆட்டங்களில் ஓரினக் காதலர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 'ஒன்லவ்' எனும் வானவில் வண்ணங்களைக் கொண்ட கைப்பட்டையை இங்கிலாந்து காற்பந்து வீரர்கள் அணிந்தால் அந்த அணிக்கு எதிராக பல தடை உத்தரவுகள் விதிக்கப்படும் என்று அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருந்ததாக இங்கிலாந்து காற்பந்துச் சங்கத்தின் தலைவர் மார்க் புலிங்ஹம் தெரிவித்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கும் போக்கைக் கடைப்பிடிப்பதற்குக் குரல் கொடுக்க இங்கிலாந்து உட்பட ஐந்து ஐரோப்பிய நாடுகள் 'ஒன்லவ்' கைப்பட்டைகளை அணியத் திட்டமிட்டிருந்தன.

போட்டியை ஏற்று நடத்தும் கத்தாரில் ஓரினக் காதல் சட்டவிரோதமானது. அதைக் கண்டிக்க 'ஒன்லவ்' கைப்பட்டையை அணிய சில ஐரோப்பிய அணிகள் திட்டமிட்டதாகக் கருதப்படுகிறது.