அல் வாக்கிரா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'டி' பிரிவு ஆட்டத்தில் துனிசியாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது ஆஸ்திரேலியா. அதன் மூலம் 12 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியா உலகக் கிண்ணப் போட்டியின் ஆட்டம் ஒன்றில் வெற்றி கண்டது.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கோல் போட்டார் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் மிட்செல் டியூக். முதல் ஆட்டத்தில் பிரான்சிடம் 4-1 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியாவுக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியமானதாக அமைந்தது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒருமுறை மட்டுமே இரண்டாம் சுற்று வரை சென்றிருக்கும் ஆஸ்திரேலியா, டென்மார்க்கிற்கு எதிரான அடுத்த 'டி' பிரிவு ஆட்டத்தில் வென்றால் இப்போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறக்கூடும். துனிசியா அந்த வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள நடப்பு வெற்றியாளர்கள் பிரான்சை வெல்லவேண்டும்.

