விஜய் ஹசாரே கிண்ணப் போட்டியில் இன்று திங்கள்கிழமை (நவம்பர் 28) நடந்த காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் தொடர்ந்து ஏழு சிக்சர்களை அடித்து லிஸ்ட்-ஏ கிரிக்கெட் சாதனை படைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச பந்துவீச்சாளர் ஷிவா சிங் இந்த அதிரடியை எதிர்கொண்டார். அவருடைய பந்துவீச்சில் ருதுராஜ் ஒரே ஓவரில் ஒரு 'நோ பால்' உட்பட அனைத்திலும் சிக்சர்களை விளாசினார். இதன்மூலம், ருதுராஜ் ஒயிட்-பால் கிரிக்கெட் வரலாற்றில் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் பந்தடிப்பாளர் ஆனார்.
மகாராஷ்டிர அணி தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ், 159 பந்துகளில் 220 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை அதிரடி ஆட்டத்தை ஆடினார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காகவும் ருதுராஜ் விளையாடுகிறார்.
அதில், 10 பவுண்டரிகளும் 16 சிக்சர்களும் அடக்கம். அவருடைய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து மொத்தம் 330 ஓட்டங்களை எடுத்தது.


