உலகக் கிண்ணம்: கேமரூன்-செர்பியா ஆட்டத்தில் கோல் மழை

உலகக் கிண்ணம்: கேமரூன்-செர்பியா ஆட்டத்தில் கோல் மழை

1 mins read
bf1cfeef-1ceb-4c52-9aef-9dacd55cfee0
தங்கள் அணியின் மூன்றாவது கோலைக் கொண்டாடும் செர்பிய வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் கேமரூனும் செர்பியாவும் இன்று திங்கள்கிழமை மாலை மோதிய 'ஜி' பிரிவு ஆட்டம் 3-3 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இப்பிரிவில் இவ்விரு அணிகளும் தங்களின் முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்தன. அதனால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள செர்பியாவும் கேமரூனும் குறைந்தபட்சம் தோல்வியைத் தவிர்க்கவேண்டிய நிலையில் இருந்தன.

29வது நிமிடத்தில் கேமரூனை முன்னுக்கு அனுப்பினார் ஷோன்-சார்ல்ஸ் காஸ்டலெட்டோ. அதற்குப் பிறகு முற்பாதியின் கடைசி சில நிமிடங்களில் மளமளவென்று செர்பியாவை முன்னுக்கு அனுப்பினர் ஸ்ட்ராஹின்யா பாவ்லோவிச், செர்ஹெய் மிலிங்கோவிச்-சாவிச்.

பின்னர் 53வது நிமிடத்தில் செர்பியாவின் மூன்றாவது கோலைப் போட்டார் அலெக்சாண்டர் மிட்ரோவிச். ஆனால் 66வது நிமிடத்துக்குள் கோல் எண்ணிக்கை சமமானது. வின்சென்ட் அபுபாக்கார், எரிக் மேக்சிம் சூப்பா-மோட்டிங் ஆகியோர் கேமரூனின் எஞ்சிய இரு கோல்களைப் போட்டனர்.