தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'பி' பிரிவு ஆட்டத்தில் இன்று அமெரிக்காவும் ஈரானும் மோதவுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியான பதற்றநிலை இருந்துவரும் வேளையில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
ஆட்டத்தில் வெல்லும் அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும்.
முதல் இரு ஆட்டங்களில் ஒரு கோலை மட்டுமே போட்டது அமெரிக்கா. அதனால் இன்றைய ஆட்டத்தில் தனது அணியின் தாக்குதல் ஆட்டத்தில் உள்ள பிரச்சினையை சரிசெய்யவேண்டிய நிலையில் இருக்கிறார் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரெக் பெர்ஹால்டர்.
முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 6-2 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த ஈரான், அடுத்த ஆட்டத்தில் கடைசி தருணத்தில் இரண்டு கோல்களைப் போட்டு 2-0 எனும் கோல் கணக்கில் வேல்சை வென்றது. அதன் மூலம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அபாரமான முறையில் தக்கவைத்துக்கொண்டது.
கடைசியாக 1998ஆம் ஆண்டுப் போட்டியின் முதல் சுற்றில் இவ்விரு அணிகளும் மோதின. அதுவே இரு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டிகளில் மோதிய முதல் ஆட்டமுமாகும்.
அதில் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றிகண்டது ஈரான்.
இதற்கிடையே, சமூக வலைத்தளங்களில் தனது தேசிய கொடியில் இடம்பெற்ற சமயம் சார்ந்த சின்னத்தை அமெரிக்க அணி அகற்றியது குறித்து ஈரான் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்திடம் புகார் கொடுத்துள்ளது. சின்னம் இடம்பெறாத ஈரானின் தேசிய கொடி டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் இடம்பெற்றது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

