அல் ரயான்: 'பி' பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் வேல்சிடம் நான்கு கோல் வித்தியாசத்தில் தோல்வியடையாமல் இருந்தாலே இங்கிலாந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிவிடும். அதே வேளையில், ஆட்டத்தில் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது வேல்ஸ். வென்றாலும் அமெரிக்காவும் ஈரானும் மோதும் ஆட்டம் சமநிலையில் முடிந்தால்தான் வேல்ஸ் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறமுடியும்.
இளையர்களின் துடிப்புடன் ஆடும் இங்கிலாந்தை வெல்லும் சவாலை எதிர்கொள்கிறது வேல்ஸ்.
64 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது வேல்ஸ். அந்த ஆனந்தம் விரைவிலேயே மறையக்கூடிய அபாயம் நிலவுகிறது.
எனினும், பல ஆண்டுகளாக அனைத்துலகக் காற்பந்தில் அறவே சோபிக்காமல் இருந்த வேல்ஸ் அண்மைக் காலமாகப் பெரிதும் மேம்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் முதன்முறையாக யூரோ போட்டிக்குத் தகுதிபெற்றது மட்டுமின்றி அரையிறுதிச் சுற்றுவரை சென்றது. அதற்குப் பிறகு சென்ற ஆண்டு நடைபெற்ற யூரோ 2020 போட்டிக்கும் தகுதிபெற்று இரண்டாம் சுற்றுவரை முன்னேறியது.

