செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

செர்பியாவை ஆதரிக்கும் ரஷ்யர்கள்

மாஸ்கோ: உக்ரேன்மீது படையெடுத்ததால் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்பதற்கு ரஷ்யாமீது தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கள் நாட்டின் அணி போட்டியில் இடம்பெறாத குறையைத் தீர்த்துக்கொள்ள அந்நாட்டினர் சிலர் செர்பியாவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பங்காளி நாடாக செர்பியா விளங்குவது இதற்குக் காரணம். பல உலக நாடுகள் ரஷ்யாமீது பல தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தாலும் செர்பியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவில் இதுவரை அதிக பாதிப்பு இல்லை.

தனி நாடாக அனைத்துலகக் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து செர்பியா இருமுறை உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சென்ற உலகக் கிண்ணப் போட்டியை ரஷ்யா ஏற்று நடத்தியது.

இன்டர் மயாமியில் சேர மெஸ்ஸி

இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை

பாரிஸ்: அர்ஜெண்டீனிய காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி (படம்) அமெரிக்காவின் இன்டர் மயாமி குழுவில் சேர இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் பிஎஸ்ஜி குழுவில் தற்போது விளையாடும் மெஸ்ஸி இன்டர் மயாமியில் சேர முடிவுசெய்ததாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அது மறுக்கப்பட்டது.

அமெரிக்காவின் மேஜர் லீக் காற்பந்தில் விளையாட விருப்பம் கொண்டுள்ளதாக மெஸ்ஸி கூறியிருந்தார். எனினும் புத்தாண்டு வரை தனது வருங்காலம் குறித்து அவர் முடிவெடுக்கப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.