உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் உருகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி கண்ட போர்ச்சுகல், அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
ஆனால், இந்த ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் போர்ச்சுகல் தரப்பில் முதல் கோலை யார் போட்டது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. தாம்தான் கோலைப் போட்டோம் என்று நினைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், புருணோ ஃபெர்னாண்டஸ் அந்த கோலைப் போட்டதாக ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த ரொனால்டோ சிரித்தார்.
இந்நிலையில், தாம் போட்டதாக அறிவிக்கப்பட்ட அந்த கோலை உண்மையிலேயே ரொனால்டோதான் போட்டிருக்கக்கூடும் என்று ஃபெர்னாண்டஸ் கூறினார்.
எது எப்படியோ, போட்டியின் அடுத்த சுற்றுக்கு போர்ச்சுகல் முன்னேறியிருப்பதே முக்கியம்.
'எச்' பிரிவின் இரு ஆட்டங்களிலும் போர்ச்சுகல் வென்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் 3-2 எனும் கோல் கணக்கில் கானாவை அது வீழ்த்தியது.
2018ல் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் போர்ச்சுகலை உருகுவே வெளியேற்றியது நினைவுகூரத்தக்கது.