செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read

கேமரூன் வீரர் தற்காலிக நீக்கம்

தோஹா: நடத்தை தொடர்பிலான காரணங்களுக்காக கேமரூன் காற்பந்து வீரர் ஆண்ட்ரே ஒனானா அணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரூன் பயிற்றுவிப்பாளர் ரிகோபர்ட் சோங்கிற்கும் கோல்காப்பாளரான ஒனானாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

உலகக் கிண்ணப் போட்டியின் 'ஜி' பிரிவில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான கேமரூனின் முதல் ஆட்டத்தில் ஒனானா விளையாடினார். ஆனால், செர்பியாவுக்கு எதிரான இரண்டாம் ஆட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் அவர் இடம்பெறவில்லை.

யுவென்டஸ் நிர்வாகம் பதவி விலகல்

மிலான்: இத்தாலியின் 'செரீ ஆ' காற்பந்து லீக்கில் விளையாடும் பிரபல யுவென்டஸ் குழுவின் தலைவர் ஆண்ட்ரெயா அன்னெலி உட்பட அதன் நிர்வாக அதிகாரிகள் பதவிவிலகியுள்ளனர். யுவென்டஸில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அவர்கள் பதவி விலகினர்.

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு பிரபல 'ஃபியாட்' வாகன நிறுவனத்தைத் தொடங்கிய அன்னெலி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரெயா அன்னெலி. 1923ஆம் ஆண்டிலிருந்து யுவே என்று செல்லமாக அழைக்கப்படும் யுவென்டஸின் உரிமையாளர்களாக அக்குடும்பம் இருந்து வந்துள்ளது.

யுவென்டஸின் அடுத்த நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று முதலீட்டாளர்கள் சந்திக்கவிருப்பதாக யுவென்டஸ் தெரிவித்தது.