லுசாய்ல்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற சவூதி அரேபியா இன்றைய 'சி' பிரிவு ஆட்டத்தில் மெக்சிகோவைக் கட்டாயமாக வெல்லவேண்டும். எனினும், அவ்வாறு நிகழாவிட்டாலும் ஏற்கெனவே எதிர்பார்ப்புகளை மிஞ்சிவிட்டது சவூதி அரேபியா.
போட்டி தொடங்குவதற்கு முன்பு 'சி' பிரிவிலிருந்து அர்ஜெண்டினா, மெக்சிகோ, போலந்து ஆகிய மூன்று அணிகளில் இரண்டுதான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. பிரிவின் முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியா அர்ஜெண்டினாவை வென்றதும் நிலைமை தலைகீழாக மாறியது.
"அவ்வளவு சிறப்பாக விளையாடுவோம் என்று உலகில் யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. சவூதி அரேபியாவில் அணியின் விளையாட்டாளர்கள் பலருக்குப் பரிச்சயமானவர்கள். ஆனால் உலகளவில் எங்கள் விளையாட்டாளர்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்காது," என்று அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் சவூதி அரேபியா வெற்றிபெற்றதைப் பற்றிப் பேசினார் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹர்வி ரெனார்ட்.
இரண்டாம் ஆட்டத்தில் போலந்திடம் தோல்வியடைந்தது சவூதி அரேபியா. எனினும், பிரிவின் கடைசி ஆட்டத்தில் வென்றால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலை உருவெடுத்திருப்பதே சவூதி அரேபியாவுக்குப் பெருமைதான்.
மெக்சிகோ இரண்டாம் சுற்றுக்கு முன்னேற, அது இன்றைய ஆட்டத்தில் குறைந்தது மூன்று கோல் வித்தியாசத்தில் சவூதி அரேபியாவை வெல்லவேண்டும், போலந்து அர்ஜெண்டினாவிடம் தோல்வியடையாமல் இருக்கவேண்டும்.

