சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான லயன் சிட்டி செய்லர்ஸிலிருந்து விளையாட்டாளர்கள், ஊழியர்கள் பலர் வெளியேறியுள்ளனர். குழுவின் உரிமையாளர்களான உள்ளூர் செல்வந்தர் ஃபாரஸ்ட் லீயின் 'சீ' நிறுவனம் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் இந்நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கேப்ரியல் குவாக், ஃபாரிஸ் ராம்லி, ஷாஹ்டான் சுலாய்மான், ஹசான் சானி உள்ளிட்ட ஆறு நட்சத்திர விளையாட்டாளர்கள் செய்லர்ஸிலிருந்து வெளியேறிவிட்டனர். குழுவில் ஆக அதிக சம்பளம் பெறும் உள்ளூர் வீரர்களில் அவர்கள் அடங்குவர் எனக் கருதப்படுகிறது. அவர்களோடு செய்லர்ஸின் பல ஊழியர்களும் குழுவிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் 'சீ' நிறுவனம் குழுவை வாங்கியதைத் தொடர்ந்து தனியார்மயமாக்கப்பட்ட சிங்கப்பூரின் முதல் காற்பந்துக் குழு என்ற பெருமையைப் பெற்றது செய்லர்ஸ். சிங்கப்பூரின் காற்பந்துச் சூழலில் அந்நிகழ்வு அதிரடியான ஒன்றாகக் காணப்பட்டது.
இப்போது இரண்டே ஆண்டுகளில் செய்லர்ஸ் பெரும் நிதிப் பிரச்சினையைஎதிர்நோக்குகிறது.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பயனீட்டாளர் இணைய நிறுவனமான 'சீ', பொருளியல் மந்தநிலை, பணவீக்கம், அதிகரிக்கும் போட்டித்தன்மை ஆகிய காரணங்களால் அண்மைக் காலமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்வர்த்தக நிறுவனமான ஷாப்பீ, கணினி விளையாட்டு நிறுவனமாக கரேனா ஆகியற்றின் உரிமையாளர்களான 'சீ'யின் மதிப்பு சென்ற ஆண்டிறுதியிலிருந்து 150 பில்லியன் டாலர் (205 பில்லியன் வெள்ளி) சரிந்துள்ளது.

