செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

'உலகக் கிண்ண கட்டுமானத் தளங்களில் பலர் மாண்டனர்'

தோஹா: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்காக விளையாட்டரங்கங்கள் கட்டப்பட்டபோது கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் பலர் மாண்டதாக கத்தாரைச் சேர்ந்த உலகக் கிண்ண உயர் அதிகாரி ஹசன் அல் தவாடி தெரிவித்துள்ளார்.

கட்டுமானப் பணிகள் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வந்தன என்றும் அதில் பணிபுரிந்த 400லிருந்து 500 ஊழியர்கள் வரை மடிந்ததாக பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தபோது அவர் கூறினார். மாண்ட ஊழியர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றார் அவர்.

மேனி பாக்கியோ வெற்றி பெற உதவினேன்; நடுவர் ஒப்புதல்

மணிலா: கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பிலிப்பீன்ஸ் குத்துச்சண்டை வீரர் மேனி பாக்கியோ வெற்றி பெற உதவியதாக முன்னாள் நடுவர் கார்லோஸ் படில்லா ஒப்புக்கொண்டுள்ளார்.

அப்போது பாக்கியோவுக்கு 21 வயது. டபிள்யூபிசி அனைத்துலகக் குத்துச்சண்டை போட்டியின் சூப்பர் 'பன்தாம்' எடைப் பிரிவில் ஆஸ்திரேலியாவின் நெடால் உசேனுக்கு எதிரான போட்டியின்போது நேர்மையற்ற வகையில் நடந்துகொண்டதாக படில்லா தெரிவித்தார்.

உயரிய விருதுக்கு முன்மொழியப்பட்ட லோ கியன் இயூ

சிங்கப்பூர்: பூப்பந்து உலக சம்மேளன விருதுக்கு, ஆண்களுக்கான பிரிவில் சிங்கப்பூரின் பூப்பந்து நட்சத்திரமும் உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தை வகிப்பவருமான லோ கியன் இயூ முன்மொழியப்பட்டுள்ளார்.

உலகப் பூப்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சன், ஆசியப் பூப்பந்து வெற்றியாளரும் உலகத் தரவரிசையில் இரண்டாவது நிலை வகிக்கும் லீ ஸி ஜியா ஆகியோரும் முன்மொழியப் பட்டுள்ளனர். இம்மாதம் 5ஆம் தேதியன்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் இந்த உயரிய விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.