தோஹா: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அது ஈரானை 1-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. தோல்வி அடைந்த ஈரான், போட்டியிலிருந்து வெளியேறியது.
அரசியல் ரீதியாக இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பகைமை இருந்து வருகிறது.
இது காற்பந்தாட்டத்திலும் வெளிப்படுத்தப்படும் என்று பேசப்பட்டது.
அதற்கு ஏற்ப நேற்றைய ஆட்டம் விறுவிறுப்பானதாக இருந்தது. இரு குழுக்களும் விட்டுக்கொடுக்காமல் போராடின.
ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கிறிஸ்டியன் புலிசிச் தலையால் முட்டி போட்ட கோல் அமெரிக்காவின் வெற்றி கோலாக அமைந்தது.
அவர் கோல் போட்டதை அவரது சக ஆட்டக்காரர்களும் அமெரிக்க ரசிகர்களும் கொண்டாடியபோது அவரால் கொண்டாட முடியாமல் போனது.
கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டபோது ஈரானிய கோல்காப்பாளர் மீது புலிசிச் மோதினார். கோல்காப்பாளரின் முழங்கால் புலிசிச்சின் வயிற்றில் பட்டு வலி பொறுக்க முடியாமல் அவர் துடித்தார்.
இருப்பினும், குழுவின் இயன் மருத்துவ சிகிச்சையாளர்கள் சிகிச்சை அளித்த பிறகு அவர் அடுத்த சில நிமிடங்களுக்கு ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
இதனால் இடைவேளையின்போது அவருக்குப் பதிலாக பிரென்டன் ஏரன்சன் மாற்று ஆட்டக்காரராகக் களம் இறங்கினார்.
பிற்பாதி ஆட்டத்தில் ஈரான் தாக்கு தலில் தீவிரம் காட்டியது. கோல் போட கிடைத்த சில பொன்னான வாய்ப்புகளை அது நூலிழையில் தவறவிட்டது.
ஆட்டம் சமநிலையில் முடிந்திருந்தால் ஈரான் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும்.
ஆனால் இறுதி வரை ஈரானால் ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போக, அமெரிக்கா வாகை சூடி கொண்டாட்ட மழையில் நனைந்தது.
நாளை மறுநாள் நடைபெறும்
காலிறுதிக்கு முந்திய ஆட்டத்தில் வலிமைமிக்க நெதர்லாந்தை அமெரிக்கா சந்திக்கிறது.

