தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது பெல்ஜியம். 'எஃப்' பிரிவில் குரோவேஷியாவுக்கு எதிரான ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து முதல் சுற்றிலேயே பெல்ஜியம் வெளியேறுவது உறுதியானது.
பல நட்சத்திரங்களைக் கொண்ட பெல்ஜிய அணிக்குக் கடந்த சில ஆண்டுகள் பொற்காலமாகக் கருதப்பட்டது. எனினும், அணி கிண்ணம் ஏதும் வெல்லவில்லை. இப்போது பெல்ஜியத்தின் பெரும்பாலான நட்சத்திரங்களுக்கு வயதாகிவிட்டது. ஏமாற்றத்துடன் பொற்காலம் நிறைவுக்கு வருகிறது.
சென்ற போட்டியில் இறுதியாட்டம் வரை சென்ற குரோவேஷியாவுக்கு எதிராக பெல்ஜியம் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால் அவற்றை வீணடித்தது. குரோவேஷியா மனவுறுதியுடன் விளையாடி பெல்ஜியத்தை நன்கு கையாண்டது.
ஆட்டம் நிறைவடைந்த பிறகு பெல்ஜியத்தின் பயிற்றுவிப்பாளர் ராபர்ட்டோ மார்ட்டினெஸ் பதவிவிலகப்போவதாக அறிவிக்கப்பட்டது.
'எஃப்' பிரிவில் குரோவேஷியாவும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக முதலிடத்தைப் பிடித்த மொரோக்கோவும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறின.
கனடாவை 2-1 எனும் கோல் கணக்கில் வென்று பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது மொரோக்கோ. முதல் சுற்றைத் தாண்டாது எனப் பலர் நினைத்த அந்த அணி பிரிவில் முதலிடத்தைப் பிடித்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. மொரோக்கோவிற்கு 'வானமே எல்லை' என்று கூறி மேலும் வெற்றிகளைக் குவிக்க நம்பிக்கை ஊட்டினார் பயிற்றுவிப்பாளர் வாலிட் ரெக்ராகுய்.
1986ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு முதன்முறையாக இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது மொரோக்கோ.