தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ணம்: கானாவை வென்றும் பலனில்லை; உருகியது உருகுவே

1 mins read
655b5e35-2258-4a7b-8dd5-a4213dd56c69
ஆட்ட முடிவில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழும் உருகுவேயின் லூயிஸ் சுவாரேஸ். படம்: இபிஏ -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் 'எச்' பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கானாவை 2-0 எனும் கோல் கணக்கில் உருகுவே தோற்கடித்தது.எனினும், அடுத்த சுற்றுக்கு முன்னேற அந்த வெற்றி போதவில்லை.

உருகுவே அணி இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற தவறியிருப்பது 20 ஆண்டுகளில் இதுவே முதன்முறை.

போர்ச்சுகல், தென்கொரியா அணிகள் உடனான முதலிரு ஆட்டங்களில் கோல் போட முடியாமல் இருந்த உருகுவே, அடுத்த சுற்றுக்கு முன்னேற கானாவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தது.

அதுவும், ஏற்கெனவே அடுத்த சுற்றுக்குச் செல்ல தகுதிபெற்றுவிட்ட போர்ச்சுகல், தென்கொரியாவிடம் தோற்கக்கூடாது என்பதே உருகுவேயின் எதிர்பார்ப்பு. அப்படி தென்கொரியா வென்றாலும், கோல் வித்தியாசம் மூலம் 'எச்' பிரிவு பட்டியலில் உருகுவே இரண்டாவது இடத்தைப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால், போர்ச்சுகல் உடனான ஆட்டம் சமநிலையில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதல் நேரத்தில் இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது தென்கொரியா.

தென்கொரியா, உருகுவே அணிகள் இரண்டும் நான்கு புள்ளிகளைப் பெற்ற நிலையில், இவ்விரண்டிற்கும் கோல் வித்தியாசமும் ஒரே மாதிரியாக இருந்தது. எனினும், மூன்று ஆட்டங்களிலும் உருகுவேயைவிட இரண்டு கோல்கள் கூடுதலாகப் போட்டதன் பலனாக அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது தென்கொரியா.

தென்கொரியாவின் வெற்றியைப் பற்றி அறிந்த உருகுவே, ஆட்டம் முடிவதற்கு முன்பு மேலும் ஒரு கோல் போட போராடியது. ஆனால் அந்த அணியின் முயற்சிக்குப் பலன் கிட்டவில்லை.