2036 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்த கத்தார் தீர்மானத்துடன் உள்ளது.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை இதுவரை வெற்றிகரமாக ஏற்று நடத்தி வரும் கத்தாருக்கு ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கான தீர்மானம் வலுப்பெற்றுள்ளது.
2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கான பொறுப்பை எந்த நாட்டிடம் ஒப்படைப்பது என்பதற்கான கால அட்டவணையை அனைத்துலக ஒலிம்பிக் குழு அறிவிக்கவில்லை.
அப்போட்டியை ஏற்று நடத்துவதற்கான வாய்ப்பு கத்தாரிடம் வழங்கப்பட்டால், முஸ்லிம் நாடு ஒன்றில் அப்போட்டி நடத்தப்படுவது அதுவே முதன்முறையாக இருக்கும்.
2016, 2020 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கான பட்டியலில் இடம்பெற கத்தார் தவறியது. அங்கு நிலவும் கோடைக்கால வெயில் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும்.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைப்போலவே ஒலிம்பிக் போட்டிகளையும் ஆண்டின் பிற்பகுதிக்குத் தள்ளிவைக்க கத்தார் முற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கிண்ணப் போட்டியின்போது வெப்பத்தின் தாக்கத்தைத் தணிக்க விளையாட்டரங்குகளில் குளிர்சாதன வசதிகளை கத்தார் பயன்படுத்தியுள்ளது.
2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்துள்ள நாடுகளில் இந்தியா, இந்தோனீசியா, தென்கொரியா உள்ளிட்டவை அடங்கும்.


