உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் 'ஜி' பிரிவு ஆட்டத்தில் பிரேசிலை வென்ற பிறகும் கேமரூன் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறாமல் போனது.
இப்பிரிவின் மற்றோர் ஆட்டத்தில் செர்பியாவை 3-2 எனும் கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து வென்றதால் இந்நிலை உருவானது.
1998க்குப் பிறகு குழுப் பிரிவு ஆட்டத்தில் பிரேசிலுக்குக் கிடைத்த முதல் தோல்வி இது.
'ஜி' பிரிவில் முதலிரு ஆட்டங்களில் வென்ற பிரேசில், அடுத்த சுற்றுக்கு ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது. இதனால், பயிற்றுவிப்பாளரின் கவனம் 'நாக்-அவுட்' சுற்றில் உள்ள அடுத்த ஆட்டத்தின் மீது உள்ளது.
எனவே, முக்கிய ஆட்டக்காரர்களுக்கு ஓய்வு வழங்க, கேமரூன் உடனான ஆட்டத்தில் பிரேசில் அணியில் ஒன்பது மாற்றங்களை அதன் பயிற்றுவிப்பாளர் செய்தார்.
பிரேசிலை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது கேமரூன். ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் கோலைப் போட்டார் வின்சென்ட் அபுபக்கர் .
அதைத் தொடர்ந்து சட்டையைக் கழற்றி வெறித்தனமாக கொண்டாடியதற்கு இரண்டாவது மஞ்சள் அட்டையும் அடுத்து சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டார்.
தப்பாட்டம் காரணமாக ஏற்கெனவே இவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அடுத்த சுற்றில் தென்கொரியாவுடன் பிரேசில் பொருதுகிறது.