உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் நேற்று பின்னிரவு நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 4-1 எனும் கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது பிரேசில்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஒவ்வொரு கோலையும் போட்டதற்குப் பிறகு பிரேசில் ஆட்டக்காரர்கள் கொண்டாடியது குறித்து மாறுபட்ட கருத்துகள் வந்துள்ளன.
கோல் போட்ட பிறகு பிரேசில் வீரர்கள் கோலாகல கொண்டாட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஏற்கெனவே தாங்கள் பயிற்சி செய்த நடன அசைவுகளை ஆட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து கருத்து கூறியவர்களில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முன்னாள் வீரர் ராய் கீனும் ஒருவர்.
"இதுபோன்ற நடனத்தை நான் பார்த்ததே இல்லை. நான் பார்ப்பவற்றை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு இது பிடிக்கவில்லை. இச்செயல் எதிரணியை அவமதிப்பதைப்போல உள்ளது," என்றார் அவர்.
ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சார்லிசன் அணியின் மூன்றாவது கோலைப் போட்ட பிறகு பயிற்றுவிப்பாளர் டிட்டேயும் ஆடினார்.
கொண்டாட்டத்தை அவர் தற்காத்துப் பேசவும் செய்தார்.
"எதிரணியை அவமதிக்கும் செயலாக கருத சிலர் இருக்கவே செய்கின்றனர். கோல் போட்டதைக் கொண்டாடுவதைத் தவிர வேறெந்த அர்த்தத்தையும் கொடுக்க நான் விரும்பவில்லை. எதிரணியை அவமதிப்பதற்காக நாங்கள் இவ்வாறு செய்யவில்லை," என்று அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
1994 உலகக் கிண்ணப் போட்டியில் அமெரிக்காவுக்காக விளையாடிய அலெக்சி லாலஸ், பிரேசில் அணியினரின் கொண்டாட்டத்தை ஆதரித்துப் பேசினார்.
"இந்த அழகிய விளையாட்டில் மிகப் பெரிய தருணத்தைக் கொண்டாட ஆடவோ பாடவோ திடலில் தலைதெறிக்க ஓடுவதிலோ தவறில்லை," என்றார்.