கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒதுங்கவும். இந்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் போர்ச்சுகலுக்காக புதிய நட்சத்திரம் உதயமாகிறார்.
நேற்று பின்னிரவு நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோல் அடித்த கொன்சாலோ ராமோஸ் என்பவர் யார்?
1. தந்தையைப்போல மகன்
ராமோசுடைய தந்தையான 44 வயது மேனுவல், போர்ச்சுகல் லீக்கில் விளையாடியவர். போர்ச்சுகலுக்காக 21 வயதுக்குக்கீழ் உடையோருக்கான அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவருடைய மகன் ராமோஸ், தந்தையை விஞ்சும் அளவுக்கு வளர்வார் எனத் தெரிகிறது.
2. வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொள்பவர்
எப்போதுமே வாய்ப்புகளைக் கைப்பற்றிக்கொள்பவராக ராமோஸ் கருதப்படுகிறார். அனைத்துலக ஆட்டங்களில் விளையாடிய முதல் 100 நிமிடங்களிலேயே நான்கு கோல்களை இவர் போட்டார்.
2020ல் பென்ஃபிகா காற்பந்துக் குழுவுக்காக விளையாடத் தொடங்கிய ராமோஸ், மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய மூன்றே நிமிடங்களில் கோல் போட்டார்.
குறிப்பிடும்படியாக, கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இவர் 'ஹாட்ரிக்' கோல் அடித்திருப்பது, 2019லிருந்து ஆறாவது முறையாகும்.
3. ஜாம்பவான்களை அன்னாந்து பார்ப்பவர்
ஆட்டத்திற்குப் பிறகு ஒருமுறை ராமோஸ் அளித்த பேட்டியில், "கிரிஸ்டியானோ ரொனால்டோ பலருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. ராபர்ட் லெவண்டவ்ஸ்கியையும் ஸ்லாட்டான் இப்ராகிமோவிச்சையும் எனக்குப் பிடிக்கும்.
இப்போது ராமோசும் தலைநிமிர்ந்து நடக்கலாம். இப்ராகிமோவிச் உலகக் கிண்ண ஆட்டத்தில் கோல் போட்டதே இல்லை, ரொனால்டோ உலகக் கிண்ண 'நாக்-அவுட்' சுற்றில் கோல் போட்டதே இல்லை. லெவண்டவ்ஸ்கி இரண்டாவது சுற்றில் கோல் போட்டபோதும், போட்டியிலிருந்து போலந்தை பிரான்ஸ் வெளியேற்றியது.
4. ஆட்ட நிலவரத்தை மாற்றக்கூடியவர்
சுவிட்சர்லாந்து உடனான ஆட்டத்தில் ராமோஸ் போட்ட கோல்களைப் பாருங்கள். சிரமமான கோணத்திலிருந்து முதல் கோலை இவர் போட்டார். இரண்டாவது, மூன்றாவது கோல்களையும் இவர் திறம்பட போட்டார். ராமோஸ் தலையால் வேகமாக முட்டி கோல் போடும் ஆற்றல் உடையவர்.
5. இவர் காற்பந்து விளையாட்டின் அடுத்த பெரிய சொத்து
பொதுவாக உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் புகழை எட்டிவிடுவது உண்டு. அந்தப் பாதையில்தான் இப்போது ராமோசும் செல்கிறார்.
உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நியூகாசல், பிரைட்டன், லீட்ஸ் ஆகிய காற்பந்துக் குழுக்கள் இவருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு அக்குழுக்களுக்கு அதிக போட்டி ஏற்படும்.
என்றபோதிலும், பென்ஃபிகா குழு உடனான ராமோசின் ஒப்பந்தம் 2025 வரை உள்ளது. அவரை வாங்க விரும்பும் குழுக்கள், அவரை பென்ஃபிகா குழுவிலிருந்து விடுவிக்க €120 மில்லியன் (S$171 மி.) செலுத்த வேண்டியிருக்கும். இந்தத் தொகையை வெகு சில குழுக்களால் மட்டுமே ஏற்க முடியும்.

