தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகக் கிண்ண காலிறுதிச் சுற்றில் மொரோக்கோ: குதூகலத்தில் அரபு நாடுகள்

1 mins read
e56e1a32-73ef-47a3-acb5-372719754bb2
மொரோக்கோ தலைநகர் ராபாட்டில், தங்கள் அணியின் வெற்றியைக் கொண்டாடும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு மொரோக்கோ முன்னேறியுள்ளது.

அணியின் இந்த வரலாறு காணாத வெற்றியை மொரோக்கோவாசிகளுடன் சேர்ந்து மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் கோலாகலத்துடன் கொண்டாடினர். மொரோக்கோவின் இந்த வெற்றியை, பாக்தாத் முதல் கசபிளாங்கா வரை ஒட்டுமொத்த அரபு உலகின் வெற்றியாக மக்கள் பார்க்கின்றனர்.

அரபு நாடு ஒன்றில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறுவது இதுவே முதன்முறை. அதுவும், இப்போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு அரபு பேசும் நாடு ஒன்று தகுதி பெற்றிருப்பது இதுவே முதன்முறை. மொரோக்கோ தலைநகர் ராபாட்டில் மக்கள் வீதிகளில் திரண்டு மணிக்கணக்காக குதூகலத்துடன் கொண்டாடினர்.

"இத்தகைய ஓர் உணர்வை நான் பெற்றிருப்பது இதுவே முதன்முறை! எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது," என்றார் மொரோக்கோவாசியான ஃபஹது பெல்பஷீர்.

அரபு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் மொரோக்கோ அணிக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

"அடேங்கப்பா! மொரோக்கோ, நீங்கள் மறுபடியும் செய்துவிட்டீர்," என்று ஜோர்தான் ராணி டுவிட்டரில் பதிவிட்டார்.

ராபாட்டில், மொரோக்கோவின் வெற்றியால் உற்சாகம் அடைந்த ஐட் பெல்கிட், பல்லாண்டு காலமாக தவிர்த்து வந்த ஒருவர் உடனான சச்சரவைத் தாம் தீர்த்துக்கொண்டதாகக் கூறினார்.

"எங்களுடைய பழைய தகராறை மறக்க இது வழிவகை செய்தது," என்றார் அவர்.

கைரோ, பெய்ரூட், துனீஸ், அம்மான், ரமல்லா ஆகிய நகர்களிலும் மொரோக்கோவின் வெற்றியை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.