அல் கோர்: இங்கிலாந்து காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராகத் தான் தொடர்வது சந்தேகத்துக்குரியது என்று தெரிவித்துள்ளார் கேரத் சவுத்கேட். உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதியாட்டத்தில் இங்கிலாந்து, பிரான்சிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சவுத்கேட் அவ்வாறு சொன்னார்.
2024ஆம் ஆண்டுவரை இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்ற சவுத்கேட் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தார்.
சென்ற உலகக் கிண்ணப் போட்டியில் 28 ஆண்டுகளில் முதன்முறையாக இங்கிலாந்தை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேற வைத்தார் சவுத்கேட். அதற்குப் பிறகு இவரின் தலைமையில் சென்ற ஆண்டு நடைபெற்ற யூரோ 2020 போட்டியில் இங்கிலாந்து இறுதியாட்டம் வரை முன்னேறியது.
அத்தகைய வெற்றிப் பாதைகளில் அணியைக் கொண்டு சென்ற சவுத்கேட் நீண்ட காலத்திற்குப் பதவியில் இருக்கவேண்டும் என்று இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் ஆசைப்பட்டது. எனினும், இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றிலேயே அணி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அது கேள்விற்குறியாக மாறியுள்ளது.

