லுசாய்ல்: மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்று 36 ஆண்டு ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்ளும் நம்பிக்கையுடன் இருக்கிறது அர்ஜென்டினா காற்பந்து அணி. கடைசியாக 1986ஆம் ஆண்டில்தான் அர்ஜென்டினா கிண்ணத்தை வென்றது.
அப்போட்டியில் மறைந்த முன்னாள் நட்சத்திரம் டியேகோ மரடோனா கிட்டத்தட்ட சொந்தமாகவே அர்ஜென்டினாவுக்குக் கிண்ணத்தை வென்று தந்தார். அதேபோல் செய்யும் இலக்குடன் இருக்கிறார் தற்போதைய அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி.
தான் விளையாடிய பார்சிலோனா குழுவில் 10 முறை 'லா லீகா' ஸ்பானிய லீக் விருதுகளையும் நான்கு முறை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தையும் வென்றவர் மெஸ்ஸி. பிரான்சின் பிஎஸ்ஜி அணியில் ஒரு முறை அந்நாட்டின் 'லீக் ஒன்' விருதையும் வென்றிருக்கிறார், அர்ஜென்டினாவுடன் கோப்பா அமெரிக்கா கிண்ணத்தையும் ஒருமுறை வென்றார். பேலன் டோர் விருதை ஆக அதிக முறை கைப்பற்றியவரும் இவரே.
காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த விளையாட்டாளர் என்றும் பல தரப்பினரால் போற்றப்படுபவர்.
எனினும், உலகக் கிண்ணத்தை இதுவரை வென்றதில்லை என்ற பெரிய குறை மெஸ்ஸிக்கு இருந்து வந்துள்ளது. அதுவே மரடோனா, பிரேசிலின் பெலே ஆகியோருக்கும் இவருக்கும் இருக்கும் வித்தியாசம்.
உலகக் கிண்ணத்தை விட்டுவைக்கக்கூடாது என்ற மனவுறுதியுடன் இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடி வந்துள்ளார் 35 வயது மெஸ்ஸி. போட்டியில் இதுவரை நான்கு கோல்களைப் போட்டுள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதியாட்டத்தில் தனது அணியின் முதல் கோலை உருவாக்கினார், அதற்குப் பிறகு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார்.
போட்டியின் முதல் ஆட்டத்தில் எதிர்பாரா வகையில் சவூதி அரேபியாவிடம் தோல்வி கண்ட அர்ஜென்டினா அணியை மீண்டெழச் செய்ததில் மெஸ்ஸிக்குப் பெரும்பங்கு உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை.
காரசாரமான காலிறுதி ஆட்டத்தில் வென்ற அர்ஜென்டினாவின் பாதையில் நிற்கிறது குரோவேஷியா. இரு அணிகளும் இன்று நடைபெறவுள்ள அரையிறுதிச் சுற்றில் மோதுகின்றன.
ரஷ்யாவில் நடைபெற்ற சென்ற உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றில் இவ்விரு அணிகளும் சந்தித்தபோது அந்த ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது குரோவேஷியா. எனினும், இந்தப் போட்டியில் நாம் பார்த்திருக்கும் அர்ஜென்டினா பெரிதும் மேம்பட்டுள்ள அணி. அதே வேளையில் சென்ற போட்டியில் இறுதியாட்டம் வரை முன்னேறிய குரோவேஷியா காலிறுதிச் சுற்றில் பிரேசிலை வெளியேற்றியது என்பதை அர்ஜென்டினா கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆட்டம் சமநிலையில் முடிந்தால் வெற்றியாளரை நிர்ணயிக்க வழங்கப்படும் கூடுதல் நேரத்தையும் அதற்குப் பிறகு வரக்கூடிய பெனால்டி வாய்ப்புகளையும் அதிகம் சார்ந்து வந்துள்ளது குரோவேஷியா. எனினும், அதிக நேரம் விளையாடியும் அந்த அணியின் விளையாட்டில் களைப்பு அதிகம் தெரிந்ததில்லை.

