மொரோக்கோவுக்கு ஆதரவு
தரும் அல்ஜீரியர்கள்
அல்ஜியர்ஸ்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வரலாறு படைத்துள்ள மொரோக்கோ உலகளவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல நடுநிலை ரசிகர்களும் மொரோக்கோ ஒரு படி மேல் சென்று கிண்ணத்தையும் கைப்பற்றும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மொரோக்கோவின் சாகசங்கள் ஆப்பிரிக்காவுக்கும் அரபு நாடுகளுக்கும் பெருமை தேடித் தந்துள்ள ஒரு நிகழ்வு. எனினும், மொரோக்கோவுக்கும் அருகே இருக்கும் மற்றோர் ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவுக்கும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் இருந்து வந்துள்ளன.
இருப்பினும் அல்ஜீரியர்களும் மொரோக்கோவின் சாதனைகளை எண்ணிப் பெருமைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறுபாடுகள் இருந்தாலும் தங்களின் 'சகோதரர்களுக்கு' ஆதரவு வழங்கவேண்டும் என்றும் சில அல்ஜீரியர்கள் கூறினர்.
அடுத்ததாக உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் நடப்பு வெற்றியாளர் பிரான்சைச் சந்திக்கிறது மொரோக்கோ.
திருப்பி அனுப்பப்பட்டிருக்கக்கூடிய அமெரிக்க விளையாட்டாளர்
நியூயார்க்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்ற அமெரிக்க வீரர் ஜியோவானி ரெய்னா (படம்) கிட்டத்தப்பட்ட திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு அமெரிக்காவும் கத்தாரின் அல் கராஃபா குழுவுக்கும் இடையே நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் ரெய்னா போதுமான முயற்சி போடாதது அதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
அந்தத் தவறைத் தொடர்ந்து முன்னாள் அமெரிக்க வீரர் கிளாவ்டியோ ரெய்னாவின் மகனான இவர், அமெரிக்க அணியின் இதர வீரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
20 வயது ரெய்னா, அதிகம் கவனிக்கப்படும் இளம் காற்பந்து நட்சத்திரங்களில் ஒருவர். எனினும், உலகக் கிண்ணப் போட்டியில் ஓர் ஆட்டத்தில்கூட இவர் தொடக்கத்திலிருந்து விளையாடவில்லை.
இரண்டாம் சுற்றில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது அமெரிக்கா. அந்த ஆட்டத்தின் பிற்பாதி முழுவதும் ரெய்னா விளையாடினார்.

