உலகக் கிண்ணக் காற்பந்து: ஆறாவது முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது
தோஹா: தனது முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் தோற்று பேரதிர்ச்சி அளித்த அர்ஜென்டினா, அப்பின்னடைவைப் பின்னுக்குத் தள்ளி, இன்று முதல் அணியாக உலகக் கிண்ணக் காற்பந்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் கடந்தமுறை இறுதிப் போட்டியாளரான குரோவேஷியாவைத் தோற்கடித்தது.
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டிமூலம் முதல் கோலை அடித்து அர்ஜென்டினாவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார் அதன் தலைவர் லயனல் மெஸ்ஸி. இதன்மூலம் நடப்பு உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்களை (5) அடித்தோர் வரிசையில் பிரான்சின் கிலியன் எம்பாப்பேவுடன் முதலிடத்தை அவர் பகிர்ந்துகொண்டார் (இன்று அதிகாலை இடம்பெற்ற 2வது அரையிறுதிப் போட்டிக்கு முந்திய நிலவரம்).
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு திடலின் நடுப்பகுதியில் இருந்து தனியாளாகப் பந்துடன் முன்னேறி, அதை வெற்றிகரமாக வலைக்குள் தள்ளினார் அர்ஜென்டினாவின் ஹுலியான் அல்வாரெஸ். இரண்டாம் பாதியின் 69வது நிமிடத்தில் எதிரணி வீரர்கள் பலரை ஏமாற்றி, மெஸ்ஸி பந்துடன் முன்னேறிய விதம் 'உலகின் சிறந்த ஆட்டக்காரராகக் கொண்டாடப்படுவதற்குத் தாம் தகுதியானவரே' என்பதைக் காட்டும் விதமாக அமைந்தது.
ஆயினும், தானே கோலடிக்க முயலாமல், அல்வாரெசிடம் அவர் பந்தைத் தள்ளிவிட்டார். அல்வாரெசும் நேர்த்தியாக அதனை வலைக்குள் தள்ள, அர்ஜென்டினாவின் வெற்றி உறுதியானது.
போட்டிக்குப்பின் பேசிய அர்ஜென்டினா பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி, "நாங்கள் வெற்றிக்குத் தகுதியான அணிதான். ஆயினும், மூன்று கோல் வித்தியாசத்தில் வெல்வோம் என்று நினைக்கவில்லை," என்றார்.
ஆட்டத்தின் பெரும்பகுதி நேரம் பந்து குரோவேஷியா வசம் இருந்தபோதும், இரண்டு கோல் வாய்ப்புகளை மட்டுமே அது உருவாக்கியது.
இன்று அதிகாலை நடந்த 2வது அரையிறுதிப் போட்டியில் நடப்பு வெற்றியாளரான பிரான்சும் மொரோக்கோவும் மோதின.

