தோஹா: அர்ஜென்டினாவிற்கு எதிரான உலகக் கிண்ணக் காற்பந்து அரை இறுதிப் போட்டியில் நடுவராகச் செயல்பட்ட இத்தாலியின் டேனியலே ஆர்சட்டோவை 'உலகின் ஆக மோசமான நடுவர்களில் ஒருவர்' என்று சாடினார் குரோவேஷிய அணித்தலைவர் லூக்கா மோட்ரிச் (படம்).
"அர்ஜென்டினாவிற்கு பெனால்டி வழங்கியதுவரை எங்களது செயல்பாடு ஓரளவு நன்றாகவே இருந்தது. பெனால்டி வழங்கி இருக்கக்கூடாது," என்று போட்டிக்குப்பின் மோட்ரிச் சொன்னார்.
"வழக்கமாக நான் நடுவர்கள் பற்றிப் பேசமாட்டேன். ஆனால், இன்று (நேற்று) என்னால் அப்படியிருக்க முடியவில்லை. எனக்குத் தெரிந்து, ஆர்சட்டோ உலகின் ஆக மோசமான நடுவர்களில் ஒருவர். இன்றைய (நேற்றைய) ஆட்டத்தை மட்டும் வைத்து நான் சொல்லவில்லை. இதற்குமுன்னரும் அவர் நடுவராகச் செயல்பட்ட ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். ஒருமுறைகூட அவரைப் பற்றி நல்ல நினைவே இல்லை," என்றார் மோட்ரிச்.
குரோவேஷியப் பயிற்றுவிப்பாளர் ஸ்லாட்டோ டாலிச்சுக்கும் நடுவர் பெனால்டி வழங்கியதில் உடன்பாடில்லை. அதுவரை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம், நடுவரின் அம்முடிவால் திசைமாறிவிட்டது என்றார் டாலிச்.

