'இறுதியே கடைசி'

'இறுதியே கடைசி'

2 mins read

தோஹா: வரும் ஞாயி­றன்று நடக்­க­ இருக்­கும் உல­கக் கிண்­ணக் காற்­பந்து இறு­திப் போட்­டியே தாம் விளை­யா­டும் கடைசி உல­கக் கிண்­ணப் போட்டி என்று அர்­ஜென்டினா அணித்­த­லை­வர் லய­னல் மெஸ்ஸி (படம்) அறி­வித்­துள்­ளார்.

உல­கின் முன்­னணி காற்­பந்து நட்­சத்­தி­ர­மாக மிளிர்ந்­து­வ­ரும் மெஸ்­ஸிக்கு உல­கக் கிண்­ணம் மட்­டும் கைக்கு எட்­டா­மல் நழுவி வரு­கிறது. அர்­ஜென்­டினா சார்­பில் வரும் ஞாயி­றன்று 172வது முறை­யாக இவர் கள­மி­றங்­க­விருக்கும் இறுதிப் போட்­டி­யில் இம்­முறை அக்­க­னவு நன­வா­கும் எனப் பெரி­தும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"எங்­க­ளது அணி இறு­திப் போட்­டிக்­குத் தகு­தி­பெற்­றதை எண்ணி பெரு­ம­கிழ்ச்சி அடை­கி­றேன். இறுதிப் போட்­டியே உல­கக் கிண்­ணத்­தில் எனது கடைசி ஆட்­ட­மாக அமை­வது சிறப்­பான தரு­ணம்," என்­றார் மெஸ்ஸி.

தமது ஐந்­தா­வது உல­கக் கிண்­ணத் தொட­ரில் விளை­யா­டும் 35 வய­தான மெஸ்ஸி, உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் இது­வரை 11 கோல்­களை அடித்­தி­ருக்­கி­றார்.

இதன்­மூ­லம் உல­கக் கிண்­ணப் போட்­டி­களில் அதிக கோல்­களை அடித்த அர்­ஜென்­டினா ஆட்­டக்­காரர் என்ற சாத­னையை கேப்­ரி­யல் பாடிஸ்­டு­டா­வி­டம் இருந்து பறித்து, தன­தாக்­கிக்­கொண்­டார் மெஸ்ஸி.

"சாதனை என்ற அள­வில் நல்ல விஷ­யம்­தான். ஆயி­னும், கிண்­ணம் வெல்­வது என்ற அணி­யின் நோக்­கம் ஈடே­று­வ­துதான் மிக­வும் முக்­கி­யம். அதுவே, அழ­கான விஷ­ய­மும்­கூட," என்­றார் இவர்.

கிண்­ணம் வெல்ல இன்­னும் ஓர் அ­டி­தான் எடுத்து வைக்கவேண்­டி­ உள்­ளது என்ற மெஸ்ஸி, இம்­முறை அது கைகூட தங்­க­ளால் ஆன அனைத்­தை­யும் செய்­வோம் என்­றும் உறு­தி­ய­ளித்­தார்.

உல­கக் கிண்ண இறு­திப் போட்­டி­யில் அர்­ஜென்­டினா விளை­யாட இருப்­பது இது ஆறா­வது முறை. 1978, 1986ஆம் ஆண்­டு­களில் கிண்­ணம் வென்ற அந்த அணி, கடைசி­யாக 2014ஆம் ஆண்டு நடந்த இறு­திப் போட்­டி­யில் ஜெர்­ம­னி­யி­டம் 1-0 என்ற கோல் கணக்­கில் வெற்றி வாய்ப்பை இழந்­தது.