சட்டோகிராம்: சேத்தேஸ்வர் புஜாராவும் ஷ்ரேயாஸ் ஐயரும் பொறுப்பாக ஆடி ஓட்டங்களைச் சேர்க்க, பங்ளாதேஷ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் அணி சரிவிலிருந்து மீண்டது.
பங்ளாதேஷ் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கெதிரான ஒருநாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் தோற்று அதிர்ச்சி அளித்தது.
அதனைத் தொடர்ந்து, அவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது.
ரோகித் சர்மா இல்லாத நிலையில் கே.எல்.ராகுல் இந்திய அணித்தலைவராகப் பொறுப்பேற்றார். அக்சர் பட்டேல், அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகிய மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுடனும் உமேஷ் யாதவ், முகம்மது சிராஜ் என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களுடனும் இந்தியா களம் கண்டது.
பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த இந்திய அணி முதல் ஆட்ட வேளையிலேயே ராகுல் (22), ஷுப்மன் கில் (20), விராத் கோஹ்லி (1) என மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின் 4வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் இணைந்த ரிஷப் பன்ட் அதிரடியாக ஆடினார். இருவரும் சேர்ந்து 64 ஓட்டங்களை எடுத்தனர். அதில் பன்டின் பங்கு 46 ஓட்டங்கள்.
புஜாரா 90 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். முதல் நாளின் கடைசி பந்தில் அக்சர் (14) தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஷ்ரேயாஸ் 82 ஓட்டங்களுடன் களத்தில் இருக்கிறார்.

