அல் கோர்: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளர் பிரான்ஸ் மீண்டும் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அது மொரோக்கோவை 2-0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
பிரான்சுக்காக ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் தியோ ஹெர்னென்டசும் 79வது நிமிடத்தில் ரென்டல் கொலோ முவானியும் கோல் போட்டனர்.
இதன்மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவும் பிரான்சும் மோதுகின்றன.
இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றிருப்பது குறித்து பிரான்ஸ் பயிற்றுவிப்பாளர் டிடியே டெஷோம் மகிழ்ச்சி தெரிவித்தார். 1998ஆம் ஆண்டில் டெஷோம் தலைமையிலான பிரெஞ்சு அணி உலகக் கிண்ணத்தை ஏந்தியது.
அதன் பிறகு 2018ஆம் ஆண்டில் பிரான்ஸ் மீண்டும் உலகக் கிண்ணத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொண்டது.
இம்முறை கிண்ணத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் இலக்குடன் அது இறுதி ஆட்டத்தில் கள
மிறங்குகிறது.
இதில் அது வெற்றி பெற்றால் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்
தடுத்த உலகக் கிண்ணப் போட்டி களில் வாகை சூடிய முதல் குழு எனும் பெருமை பிரான்ஸைச் சேரும். ஆகக் கடைசியாக 1958ஆம் ஆண்டிலிருந்து 1962ஆம் ஆண்டிலும் அடுத்தடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசில் வெற்றி பெற்றது.
கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டி தொடங்கியதிலிருந்து பிரெஞ்சு அணி சக்கைபோடு போட்டு முத்திரை பதித்து வருகிறது.
இந்நிலையில், இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரரும் அணித் தலை
வருமான லயனல் மெஸ்ஸியை அடக்கத் தமது குழு தயாராக இருப்பதாக டெஷோம் தெரிவித்தார்.
"இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் மொரோக்கோவை வீழத்த மிகக் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது.
"வெற்றி பெற தரம், அனுபவம், குழு உணர்வு ஆகியவை அவசியமாக இருந்தன. ஆட்டத்தின்போது சில சவால்மிக்க நேரங்கள் இருந்தன. அப்போது தற்காப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. பிரெஞ்சு ஆட்டக்காரர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கும் விதமாக இருந்தது. எனக்குப் பெருமையாக உள்ளது," என்றார் டெஷோம்.
"உலகக் கிண்ணப் போட்டி தொடங்கியதிலிருந்து மெஸ்ஸி அபாரமாக விளையாடி வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை வேறு. அவர் அப்போது மத்திய தாக்குதல் ஆட்டக்காரராகக் களமிறங்கினார். இப்போது முழுக்க முழுக்க கோல் போடவும் கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் பொறுப்பும் அவருக்குத் தரப்பட்டுள்ளது.
"மிக அற்புதமாக விளையாடி வரும் மெஸ்ஸி, உலகிலேயே மிகச் சிறப்பான காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவர்.
"இறுதி ஆட்டத்தில் அவரை எதிர்கொண்டு முறியடிப்பதில் தீவிரம் காட்டுவோம். அதேபோல எங்களிடம் உள்ள மிகச் சிறந்த ஆட்டக்காரர்களையும் தடுத்து நிறுத்த அர்ஜென்டினா முயற்சி செய்யும்," என்றார் டெஷோம்.
இறுதி ஆட்டத்துக்குத் தமது ஆட்டக்காரர்கள் அனைவரும் காயமின்றி, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்வதாக டெஷோம் கூறினார்.
ஒருசில ஆட்டக்காரர்களிடம் சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் அக்கறை தெரிவித்தார்.

