அல் கோர்: அரையிறுதிச் சுற்றில் தோல்வியின் பிடியில் சிக்கிக்கொண்டபோதிலும் மொரோக்கோ சாதனை படைத்துவிட்டதாக அக்குழுவின் பயிற்றுவிப்பாளர் வலித் ரெக்ரகி தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க, அரபு நாடு எனும் பெருமை மொரோக்கோவைச் சேரும்.
உலகக் கிண்ணப் போட்டி தொடங்கியதிலிருந்து ரெக்ரகி வகுத்த வியூகங்கள் குறித்து குறை சொல்லவே முடியாது. ஆனால் நேற்று பிரான்சுக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அவர் எடுத்த முடிவு தொடர்பாக சிலர் குறைகூறி வருகின்றனர். காயம் அடைந்து முழுமையாகக் குணமடையாத சில ஆட்டக்காரர்களை ரெக்ரகி களமிறக்கினார். பிறகு தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
அணிப் பட்டியலில் நயீஃப் அகுவேர்ட் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஆட்டத்துக்கு முன்பு மொரோக்கோ ஆட்டக்காரர்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அவர் சிரமப்படுவதைப் பார்த்து அவரை ஓய்வெடுக்கச் சொன்னார் ரெக்ரகி.
ஏற்கெனவே காயம் அடைந்திருந்த அணித் தலைவரும் தற்காப்பு ஆட்டக்காரருமான ரொமேன் சாயிஸ் ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் வெளியேறினார். இடைவேளையின்போது மற்றொரு தற்காப்பு ஆட்டக்காரரான நோசேர் மஸ்ராவியும் ஆட்டத்திலிருந்து விலகினார்.
இந்தப் பின்னடைவுகளைக் கண்டு மனந்தளராத ரெக்ரகி, தமது வியூகத்தை மாற்றி அமைத்தார். பிற்பாதியில் களமிறங்கிய மொரோக்கா அணி துணிவுடன் கடுமையாகப் போராடியது.
ரெக்ரகி செய்த மாற்றங்கள் பெரிதளவில் கைகொடுத்தது. பிரெஞ்சு ஆட்டக்காரர்களுக்குக் கடுமையான போட்டியை மொரோக்கோ அணி தந்தது.
ஆனால் 79வது நிமிடத்தில் பிரான்ஸ் போட்ட இரண்டாவது கோல் மொரோக்கோவின் தோல்வியை உறுதி செய்தது.
இந்நிலையில், இன்னொரு சாதனையைப் படைக்க மொரோக்கா தயாராக உள்ளது. மூன்றாவது இடத்துக்காக குரோவேஷியாவுடன் மொரோக்கோ நாளை மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனைப் பட்டியலை நீட்டிக்க மொரோக்கா முனைப்புடன் உள்ளது.
உலகளாவிய நிலையில் தடம் பதித்துள்ள மொரோக்கோ வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதாக ரெக்ரகி தெரிவித்தார்.
மொரோக்கோ குழுவின் சாதனை தங்களைப் பெருமைப்படுத்தி இருப்பதாக அந்நாட்டு மன்னர், மக்கள் அனைவரும் தெரிவித்ததாக தமது ஆட்டக்காரர்களிடம் ரெக்ரகி ஆட்டம் முடிந்ததும் கூறினார்.

