சட்டோகிராம்: இந்தியா-பங்ளாதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன்தினம் தொடங்கியது.
நேற்று இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் பங்ளாதேஷ் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டு
களைக் கைப்பற்றினார்.
நேற்று முன்தினம் முதலில் பந்தடித்த இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
புஜாரா 90 ஓட்டங்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களும் (ஆட்டமிழக்கவில்லை), ரிஷப் பன்ட் 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஸ்ரேயாஸ் ஐயருடன், அஸ்வின் இணைந்து ஆட்டத்தைத் தொடங்கினார். ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவரது விக்கெட் கைப்பற்றப்பட்டது. மேலும் 4 ஓட்டங்கள் மட்டுமே அவர் சேர்த்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 86 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பங்ளாதேஷின் எபாத் உசேன் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். இந்தியாவின் ஏழாவது விக்கெட் 293 ஓட்டஙகளில் விழுந்தது. எட்டாவது விக்கெட்டான அஸ்வின்-குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடியது.
இந்திய அணி 102.2 ஓவர்களில் 300 ஓட்டங்களைத் தொட்டது. மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அஸ்வின் அரைசதம் அடித்தார். 91 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 50 ஓட்டங்களை அஸ்வின் எட்டினார். 87வது டெஸ்ட்டில் விளையாடும் அவருக்கு இது 13வது அரைசதமாகும்.
அஸ்வின்-குல்தீப் யாதவ் சிறப்பாக ஆடியதால் இந்தியா தொடர்ந்து ஓட்டங்களைக் குவித்தது. 131 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ஓட்டங்கள் குவித்து இருந்தது. அஸ்வின் 58 ஓட்டங்களிலும் குல்தீப் யாதவ் 40 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சிராஜ் 4 ஓட்டங்களில் நடையைக் கட்ட, இந்திய அணி முதல் இன்னிங்சில் 404 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பங்ளாதேஷ் தரப்பில் மெகிடி, இஸ்மால் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

