மீண்டும் யங் லயன்ஸ்
பயிற்றுவிப்பாளராக ஃபிலிப்பே ஆவ்
சிங்கப்பூர்: இரண்டாவது முறையாக சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான யங் லயன்சின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்கவுள்ளார் ஃபிலிப்பே ஆவ்.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் பிரிமியர் லீக் பருவத்தில் நஸ்ரீ நசீருக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் 45 வயது ஆவ். தற்போது சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் செயல்முறைப் பிரிவின் தலைவராக ஆவ் பதவி வகிக்கிறார். அந்தப் பதவியிலும் அவர் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2021ஆம் ஆண்டில் யங் லயன்ஸ் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பு வகித்தார் ஆவ்.
'சூப்பர் லீக்' தொடர்கதை
மட்ரிட்: சர்ச்சைக்குரிய 'ஐரோப்பிய சூப்பர் லீக்' காற்பந்து லீக்கைத் தொடங்குவதற்கான திட்டம் இன்னமும் நடப்பில் உள்ளதாகக் கூறியுள்ளார் 'ஏ22 ஸ்போர்ட்ஸ் மேனேஜ்டென்ட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பெர்ன்ட் ரெய்கார்ட். 'சூப்பர் லீக்'கிற்கு நிதி ஆதரவு வழங்குவதற்காக 'ஏ22 ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்' நிறுவப்பட்டிருந்தது.
அந்த லீக்கைத் தொடங்குவது குறித்து ஐரோப்பாவின் முன்னணி நீதிமன்றத்தின் ஆலோசகர் ஒருவர் நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்தார். அது, 'சூப்பர் லீக்'கை அறவே விரும்பாத யூயேஃபா எனும் ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்கள் ஒன்றியம், அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் ஆகியவற்றுக்கு ஆதரவு தரும் வகையில் அமைந்தது.
எனினும், அதைத் தொடர்ந்து 'சூப்பர் லீக்'கைத் தொடங்குவதற்கான தங்களின் கனவு இன்னமும் ஓயவில்லை என்று 'ஏ22 ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்' குறிப்பிட்டுள்ளது.
வருங்கால காற்பந்து நட்சத்திரத்தை வாங்கும் ரியால் மட்ரிட்
மட்ரிட்: அடுத்த மாபெரும் காற்பந்து நட்சத்திரமாக உருவெடுத்துவரும் பிரேசிலைச் சேர்ந்த என்ட்ரிக் (படம்) எனும் 16 வயது வீரரை வாங்கவுள்ளது ஸ்பெயினின் ரியால் மட்ரிட் குழு.
தற்போது பிரேசிலின் பால்மெய்ராஸ் குழுவிற்கு விளையாடி வருகிறார் என்ட்ரிக். 2024ஆம் ஆண்டு இவரை வாங்க வகைசெய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
என்ட்ரிக்கை வாங்குவதற்கான விலை உட்பட ஒப்பந்தத்தில் இடம்பெறும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், சுமார் 72 மில்லியன் யூரோ (103.85 மில்லியன் வெள்ளி) விலைக்கு என்ட்ரிக் வாங்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

