லிஸ்பன்: போர்ச்சுகல் காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் ஃபெர்னாண்டோ சாந்தோஸ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். போர்ச்சுகல் காற்பந்துச் சங்கம் இதை உறுதிப்படுத்தியது.
உலகக் கிண்ணப் போட்டியில் போர்ச்சுகல் காலிறுதிச் சுற்றில் வெளியேற்றப்பட்டதையடுத்து இவர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார். எனினும், மிகுந்த நன்றியுடன் தான் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக 68 வயது சாந்தோஸ் கூறினார்.
உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மொரோக்கோவிடம் தோல்வியடைந்தது போர்ச்சுகல். அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அந்த ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சாந்தோஸ் விளையாட வைக்காமல் இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது.
"குழுக்களை வழிநடத்தும்போது சில கடுமையான முடிவுகளை எடுக்கத்தான் வேண்டும். நான் எடுத்த முடிவுகள் எல்லோரையும் திருப்திப்படுத்தாமல் போனது சாதாரணமானதுதான். ஆனால், என்றுமே நான் எடுத்த முடிவுகள் அணியின் நலனைக் கருதி எடுக்கப்பட்டவையே," என்று சாந்தோஸ் குறிப்பிட்டார்.
2014ஆம் ஆண்டு போர்ச்சுகலின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார் சாந்தோஸ். இவர் பயன்படுத்திய உத்திகள் கண்டனத்திற்கு உள்ளானாலும் 2016ஆம் ஆண்டு போர்ச்சுகலுக்கு யூரோ கிண்ணத்தை வென்று தந்தார். அதுவே அனைத்துலகக் காற்பந்தில் போர்ச்சுகல் வென்ற முதல் கிண்ணம். இனி போர்ச்சுகலின் பயிற்றுவிப்பாளராக ஜோசே மொரின்யோ நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

