லுசாய்ல்: கடந்த சுமார் 11 ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த காற்பந்து வீரர்களில் ஒருவராகப் போற்றப்பட்டு வந்துள்ளார் அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி. காற்பந்து வரலாற்றில் இவரே ஆகச் சிறந்த வீரர் என்றும் பலர் சொல்வர். சந்தேகமின்றி அதை நிரூபிக்கவே இந்த உலகக் கிண்ணத்தை வெல்லும் வெறியுடன் இயங்குகிறார் மெஸ்ஸி.
உலகக் கிண்ணப் போட்டிகளில் அர்ஜென்டினாவுக்கு ஆக அதிக கோல்களைப் போட்டிருந்தவர் முன்னாள் வீரர் கேப்ரியல் பட்டிஸ்டுடா. 10 கோல்கள் போட்டிருந்த அவரின் சாதனையை இவ்வாண்டுப் போட்டியில் முறியடித்தார் மெஸ்ஸி.
தனது சாதனையை மெஸ்ஸி முறியடித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பட்டிஸ்டுடா குறிப்பிட்டார்.
"லியோ (மெஸ்ஸி) இந்த சாதனையைப் படைக்க உகந்தவர். உச்சத்தில் இருக்கும் தகுதி உள்ள ஒருவர் என்றால் அது மெஸ்ஸிதான்," என்றார் 53 வயது பட்டிஸ்டுடா.
"மெஸ்ஸி என்பவர் வேறு உலகிலிருந்து வந்தவர் அல்ல. அவர் மற்ற எல்லா காற்பந்து வீரர்களையும் விட சிறப்பாக விளையாடும் ஒரு மனிதர். அப்படிப்பட்ட ஒருவர் என்னை மிஞ்சும்போது நான் வேதனை அடையமுடியாது. அவர் எனக்கு ஆனந்தம் மட்டுமே அளிக்கிறார்," என்று பட்டிஸ்டுடா கூறினார்.
1994ஆம் ஆண்டுக்கும் 2002ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகக் கிண்ணப் போட்டிகளில் அர்ஜென்டினாவுக்கு 10 கோல்களைப் போட்டார் பட்டிஸ்டுடா. அந்தச் சாதனையைப் பின்னுக்குத் தள்ளி 11 கோல்களைப் போட்டுள்ளார் மெஸ்ஸி.
இந்த உலகக் கிண்ணப் போட்டியில் மட்டும் மெஸ்ஸி ஐந்து கோல்களைப் போட்டுவிட்டார். தான் எதிர்பார்த்ததைவிட இப்போட்டியில் இவர் சிறப்பாக விளையாடியுள்ளதாகச் சொன்னார் பட்டிஸ்டுடா.
இப்போட்டியைப் படுமோசமாகத் தொடங்கிய அர்ஜென்டினா படிப்படியாக மேம்பட்டது. நெதர்லாந்துக்கு எதிரான காலிறுதியாட்டத்தில் வெற்றி பெறும் நிலையிலிருந்த பிறகு பெரிதும் தடுமாறி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால், குரோவேஷியாவுக்கு எதிரான அரையிறுதியாட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி 3-0 எனும் கோல் கணக்கில் வென்று இறுதியாட்டத்திற்கு முன்னேறியது.
அதில் குரோவேஷியாவின் 20 வயது தற்காப்பு வீரர் ஜோஸ்கோ குவார்டியோலை 35 வயது மெஸ்ஸி தாண்டிச் சென்றது மறக்கமுடியாத காட்சியாக அமைந்தது. அதே வேளையில், அந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் இளம் தாக்குதல் ஆட்டக்காரரான ஹூலியன் அல்வாரெஸ் இரண்டு கோல்களைப் போட்டு தனது பக்கமும் கவனத்தை ஈர்த்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சீர்குலைந்து போயிருந்த அர்ஜென்டினா அணியை மீண்டெழச் செய்து இப்போட்டியில் நல்ல முன்னேற்றம் காண வைத்துள்ள பெருமை அதன் இளம் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனியையும் சேரும்.
மெஸ்ஸி நிகழ்காலம் என்றால் அவரின் இடத்தைப் பிடிக்கத் தயாராய் காத்துக்கொண்டிருக்கும் வருங்காலம் பிரான்சின் கிலியோன் எம்பாப்பே. மெஸ்ஸிக்குப் பிறகு இவர்தான் அடுத்த மாபெரும் காற்பந்து நட்சத்திரம் என்பது பலரின் கருத்து. இருவரும் பிரான்சின் பிஎஸ்ஜி குழுவில் ஒன்றாக விளையாடுபவர்கள்.
ஆனால் உலகக் காற்பந்து மேடையில் இன்று நேர் எதிரே மோதவுள்ளனர். நாளை மறுநாள் தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் எம்பாப்பேக்கு உலகக் கிண்ண வெற்றியே ஆக மதிப்புமிக்கப் பரிசாக அமையும். காரணம், அந்த வெற்றி அணிக்கான வெற்றி மட்டுமல்ல மெஸ்ஸியின் இடத்தை எம்பாப்பே பிடித்துவிட்டார் என்பதற்கான அங்கீகாரமாகவும் அமையலாம்.
சென்ற உலகக் கிண்ணப் போட்டியில் பிரான்ஸ் கிண்ணத்தை வென்றபோது அதிரடியான 19 வயது இளம் காளையாக உலகிற்கு அறிமுகமானார் எம்பாப்பே. அந்த வகையில் இவர் ஏற்கெனவே உச்சியைத் தொட்டுவிட்டார் என்றும் சிலர் நினைக்கலாம்.
எனினும், ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த காற்பந்து வீரருக்கு வழங்கப்படும் 'பேலன் டோர்' விருதை ெம்பாப்பே இதுவரை வென்றதில்லை. அந்த விருதை வரலாறு காணாத வகையில் ஏழு முறை வென்றுள்ளார் மெஸ்ஸி.
அதனால் எம்பாப்பே செல்ல இன்னும் சில தூரம் இருக்கலாம். பிரான்ஸ் இந்த உலகக் கிண்ணத்தை வென்றால் தூரம் கணிசமாகக் குறையலாம்.
"நான் விருதை (பேலன் டோர்) வெல்லப்போகிறேன் என்று நினைக்கிறேன்," என்று எம்பாப்பே முன்னதாகக் கூறியிருந்தார். "நான் எல்லாவற்றைப் பற்றியும் கனவு காண்பேன். எல்லை கிடையாது," என்றும் குறிப்பிட்டிருந்தார் இவர். கடந்த செப்டம்பர் மாதம் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழுடன் நடைபெற்ற நேர்காணலில் அவ்வாறு பேசினார் எம்பாப்பே.
மெஸ்ஸியின் அர்ஜென்டினா கிண்ணத்தை வெல்லும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். அதுவே பற்பல ரசிகர்களின் கனவும்கூட. காரணம், இன்றைய இறுதியாட்டமே மெஸ்ஸி விளையாடவிருக்கும் கடைசி உலகக் கிண்ண ஆட்டம்.
அவர் இதுவரை வெல்லாத இந்த மாபெரும் கிண்ணத்தைத் தனது கடைசி ஆட்டத்தில் வென்றால் அதைவிட ஒரு மகத்துவமான நிகழ்வு இருக்கமுடியாது.
பிரான்சும் போட்டியில் சிறப்பாக விளையாடிவந்துள்ளது. பிரான்சின் பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோம் பலரால் அதிகம் போற்றப்படுபவர். வெற்றி பெறவேண்டும் என்ற உணர்வு அவர் ரத்தத்தில் ஊறியிருப்பதாகக் கூறப்படுவது அதற்குக் காரணம்.
1998ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பிரேசிலை 3-0 எனும் கோல் கணக்கில் வென்று உலகை அதிர வைத்தது பிரான்ஸ். அப்போது பிரான்ஸ் அணித் தலைவராக இருந்தவர் டேஷோம்.
அதற்குப் பிறகு அணியின் பயிற்றுவிப்பாளராகவும் 2018ல் உலகக் கிண்ணத்தை வென்றார்.

