பெல்கிரேட்: 'ஃபிரீகிக்' வாய்ப்புகளை ஆகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் காற்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் சினிசா மிஹாய்லொவிச் காலமானார். ரத்தப் புற்றுநோய் காரணமாகக் காலமான இவருக்கு வயது 53.
செர்பியாவைச் சேர்ந்த மிஹாய்லொவிச் முன்னதாக யூகோஸ்லாவிய தேசிய அணிக்கு விளையாடினார். தற்காப்பு விளையாட்டாளராக இருந்தபோதும் பல கோல்களைப் போட்டிருக்கிறார்.
இவர் போட்ட கோல்களில் பல 'ஃபிரீகிக்' வாய்ப்புகளின் மூலம் விழுந்தவை. ஒரு கட்டத்தில் மிஹாய்லொவிச், இங்கிலாந்தின் டேவிட் பெக்ஹம், பிரேசிலின் ரொபெர்ட்டோ கார்லோஸ் ஆகியோர்தான் உலகின் தலைசிறந்த 'ஃபிரீகிக்' வீரர்களாகத் திகழ்ந்தனர்.
இத்தாலியின் லாட்ஸியோ, சம்ப்டோரியா ஆகிய குழுக்களில் பல ஆண்டுகள் விளையாடினார் மிஹாய்லொவிச். விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு இவர் பல குழுக்களுக்குப் பயிற்றுவிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.
ஆக அண்மையில் இத்தாலியின் பொலோன்யா குழுவின் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிந்தார். கடந்த செப்டம்பர் மாதம் அந்தப் பொறுப்பிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக பிரபல இத்தாலிய குழுக்களான ஏசி மிலான், ஃபியோரென்டினா உள்ளிட்டவற்றின் பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்திருக்கிறார் மிஹாய்லொவிச்.
செர்பிய அணியின் பயிற்றுவிப்பாளராகவும் சில காலம் இருந்தார்.
"விடைபெறுவோம் தலைவா, நீங்கள் என்றுமே எங்கள் மனத்தில் இருப்பீர்கள்," என்று பொலோன்யா டுவிட்டரில் அனுதாபம் தெரிவித்தது.
"சொர்க்கத்திற்கு மேலும் ஒரு சகாப்தம் கிடைத்துவிட்டது. நீங்கள் இல்லாத குறை என்றுமே போகாது," என்று ஏசி மிலான் அதன் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டது.
"திடலிலும் சரி வாழ்க்கையிலும் சரி நீங்கள் சிங்கத்தைப் போல் போராடினீர்கள்... இன்றும் என்றும் நீங்கள் ஒரு வெற்றியாளர்தான்," என்று இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி டுவிட்டர் வாயிலாக மரியாதை செலுத்தினார்.
அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் தலைவர் ஜியானி இன்ஃபன்டினோவும் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
1991ஆம் ஆண்டில் செர்பியாவின் ரெட் ஸ்டார் பெல்கிரேட் குழு யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றது. பிரபலமடைந்த அக்குழுவில் இடம்பெற்றவர் மிஹாய்லொவிச்.

