சிட்டாகோங்: பங்ளாதேஷுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 188 ஓட்டங்களில் அபார வெற்றி கண்டுள்ளது இந்தியா.
தனது முதல் இன்னிங்ஸில் 404 ஓட்டங்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா. அதற்குப் பிறகு பங்ளாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸி்ல 150 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு மேலும் 258 ஓட்டங்களை இந்தியா குவித்தது.
அத்துடன் பந்தடிப்பதை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்தது.
அதைத் தொடர்ந்து ஆட்டத்தில் வெற்றிபெற பங்ளாதேஷ் 513 ஓட்டங்களை எடுக்கவேண்டியிருந்தது.
ஆட்டத்தின் நான்காவது நாளில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு பங்ளாதேஷ் 272 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஐந்தாம் நாளான நேற்று மொத்தம் 324 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதையடுத்து சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி கண்டது பங்ளாதேஷ்.
கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா பங்ளாதேஷிடம் தோல்விகண்டதில்லை. இந்த ஆட்டத்திலும் அந்நிலை மாறுவதாகக் தெரியவில்லை.
ஷுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா ஆகியோர் சதம் அடித்து இந்திய அணிக்கு ஓட்டங்களைக் குவித்தனர். அதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் கணிசமாக அதிகரித்தது.
84 ஓட்டங்களை எடுத்து பங்ளாதேஷை ஓரளவு போராட வைத்தார் ஷாக்கிப் அல் ஹசான்.
வெற்றியைத் தொடர்ந்து இந்த இரு ஆட்ட டெஸ்ட் தொடரில் 1-0 எனும் கணக்கில் முன்னணி வகிக்கிறது இந்தியா.
முன்னதாக ஒருநாள் தொடரில் பங்ளாதேஷிடம் 2-1 எனும் கணக்கில் இந்தியா தோல்வியடைந்திருந்தது. அந்த வகையில் இந்த வெற்றி அணிக்கு நம்பிக்கை ஊட்டும் ஒன்றாக அமைந்தது.
இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை முதல் மிர்பூர் நகரில் நடைபெறும்.

