காற்பந்து சகாப்தமும் பிரேசிலின் முன்னாள் நட்சத்திர வீரருமான பெலே நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு 82 வயது.
சிறுநீரகப் பிரச்சினை, பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றுக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
பெலேயின் இறப்பு உலகெங்கும் உள்ள காற்பந்து ரசிகர்களை மீளாத் துயரில் ஆழ்த்திஉள்ளது.
1958ஆம் ஆண்டில் பிரேசில் முதன்முறையாக உலகக் கிண்ணத்தை ஏந்தியது. அதற்கு முக்கிய காரணமாக பெலே இருந்தார். நான்கு ஆட்டங்களில் அவர் ஆறு கோல்கள் போட்டார்.அப்போது அவருக்கு 17 வயது.
மூன்று முறை உலகக் கிண்ணம் வென்ற ஒரே விளையாட்டாளர் எனும் பெருமை அவரைச் சேரும். பெலே மொத்தம் 1,279 கோல்கள் போட்டிருப்பதாக கின்னஸ் உலகச் சாதனை தெரிவிக்கிறது. 1995ஆம் ஆண்டில் பிரேசிலின் விளையாட்டுத்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். அவரைக் கௌரவப்
படுத்தும் வகையில் பிரேசிலில் நவம்பர் 19 பெலே தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதற்கிடையே, பெலேயின் மரணத்துக்கு முன்னாள், இந்நாள் காற்பந்து நட்சத்திரங்கள், உலகத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலர் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டனர். அவரது அபார ஆட்டத்தைத் தொலைக்காட்சியிலும் நேரிலும் பலர் கண்டு மகிழ்ந்தனர். இந்த நினைவுகள் வாழ்நாள் முழுவதும் தங்கள் மனதைவிட்டு நீங்காது என்று உலகெங்கும் உள்ள
அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.
பெலே சிங்கப்பூருக்கு ஐந்து முறை வந்துள்ளார்.
மூன்றாவது முறையாக
உலகக் கிண்ணத்தை வென்று, நான்கு ஆண்டுகள் கழித்து, 1974ஆம் ஆண்டில் அவர் முதன்முறையாகச் சிங்கப்பூருக்கு வந்தார். குளிர்பான உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளரும் செல்வந்
தருமான இயோ யாப் செங்கின் ஏற்பாட்டில் ஆசியாவில் நடைபெற்ற காற்பந்துச் சுற்றுப்பயணத்தில் பெலே கலந்துகொண்டார். அப்போது சிங்கப்பூரில் அவர் மூன்று நாள் தங்கி உள்ளூர் காற்பந்து வீரர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
1979ஆம் ஆண்டில் தேசிய விளையாட்டரங்கில் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவுடன் நியூயார்க் காஸ்மோஸ் குழு நட்புமுறை ஆட்டத்தில் மோதியது. நியூயார்க் காஸ்மோஸ் குழுவில் இருந்த பெலே சிங்கப்பூர் வந்திருந்தார். ஆனால் காயம் காரணமாக அவரால் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த ஆட்டத்தில் காஸ்மோஸ் அணி 4-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்து அவர் 2001ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டார். எஸ்-லீக் ரசிகர் விழாவில் அவர் கலந்துகொண்டார். 2006ஆம் ஆண்டில் அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்து சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியைச் சேர்ந்த இளம் உள்ளூர் காற்பந்து, வலைப்பந்து வீரர்களைச் சந்தித்தார்.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு வந்தார். அதுவே சிங்கப்பூருக்கு அவர் மேற்கொண்ட கடைசி பயணம். அவருடன் பிரெஞ்சு நட்சத்திர வீரர் எரிக் கேன்டோனாவும் அமெரிக்க நட்சத்திர வீரர் கோபி ஜோன்சும் வந்தனர். எஸ்-லீக் ஆட்டத்தைக் கண்டு களித்தது மட்டுமல்லாது, சிங்கப்பூர் விளை யாட்டுப் பள்ளி மாணவர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.

