லிவர்பூல்: லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவின் தற்காப்பு ஆட்டக்காரர் வாட் ஃபாஸ் போட்ட இரண்டு கோல்கள் லிவர்பூல் குழுவை வெற்றிபெறச் செய்தன.
சொந்த ஆன்ஃபீல்ட் அரங்கில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் நான்காம் நிமிடத்திலேயே பின்தங்கியது லிவர்பூல். டியூஸ்பரி ஹால் அடித்த கோல்மூலம் லெஸ்டர் குழு முன்னிலைக்குச் சென்றது. கிட்டத்தட்ட திடலின் நடுவில் இருந்து தனியாளாக பந்துடன் முன்னேறிச் சென்று, கோல் போட்டார் ஹால்.
இந்நிலையில், 38வது நிமிடத்தில் லிவர்பூலின் அலெக்சாண்டர் ஆர்னல்ட் உதைத்த பந்தைத் தடுத்தாட முற்பட்டார் ஃபாஸ். ஆனால், எதிர்பாராத விதமாக பந்து அவரது காலில் பட்டு, அருகிலிருந்து கோல்காப்பாளரின் தலைக்கு மேலே சென்று, வலைக்குள் புகுந்தது.
அதன்பின்னும் அவரை துரதிர்ஷ்டம் துரத்தியது. முற்பாதி ஆட்டம் முடியப்போகும் தறுவாயில், லிவர்பூல் வீரர் டார்வின் நூன்யெஸ், லெஸ்டர் வலையை நோக்கி உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. ஆயினும், அது ஃபாஸின் காலில் பட்டு வலைக்குள் புகவே, லிவர்பூல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இப்போதைக்கு, லிவர்பூல் 18 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும் லெஸ்டர் 17 புள்ளிகளுடன் 13ஆம் இடத்திலும் உள்ளன.

