லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் இதுவரை சிறப்பாக விளையாடி முதலிடம் வகித்து வருகிறது ஆர்சனல். எனினும், பருவம் முழுவதும் அதிகம் தடுமாறாமல் சிறப்பாக விளையாடினால்தான் ஆர்சனலால் 19 ஆண்டுகளில் முதன்முறையாக பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லமுடியும்.
இதுவரை பெரிய குழுக்களுக்கு எதிரான பல ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வென்றுள்ள ஆர்சனல், பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நியூகாசல் யுனைடெட்டுக்கு எதிரான சென்ற லீக் ஆட்டத்தில் கோலின்றி சமநிலை கண்டது. இன்று டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் வடிவில் மேலும் ஒரு சவாலை எதிர்கொள்கிறது.
எனினும், இதற்கு முன்பு இக்குழு சரியக்கூடும் என்று பலர் எதிர்பார்த்தபோதும் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்துள்ளது ஆர்சனல். அதோடு, இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும் முதலிடம் இப்போதைக்குப் பறிபோகாது.
ஆனால், ஆர்சனல் கடைசி வரை சிறப்பாக ஆடுமா என்ற சந்தேகம் எழத் தொடங்கும்.
உலகக் கிண்ணப் போட்டி தொடங்குவதற்கு முன்பிருந்தே சரியாக விளையாடாத ஸ்பர்ஸ், கிரிஸ்டல் பேலசுக்கு எதிரான அதன் முந்தைய லீக் ஆட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் வென்று தன்னம்பிக்கையை மீட்டுக்கொண்டது.
ஆகக் கடைசி நிலவரப்படி லீக் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது ஸ்பர்ஸ். இங்கிலாந்துத் தலைநகர் லண்டனின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த இவ்விரு குழுக்களும் பரம வைரிகள்.

