ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான யங் லயன்சில் வெளிநாட்டு விளையாட்டாளர்கள் இடம்பெறவுள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த ஜுன் கொபாயாஷி, கன் கொபாயாஷி இருவரும் யங் லயன்ஸ் குழுவினருடன் கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. இவர்கள் சென்ற ஆண்டு சிங்கப்பூர் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்ற அல்பிரெக்ஸ் நிகாட்டா குழுவில் முக்கியப் பங்கு வகித்தவர்கள்.
மார்ச் மாதம் தொடங்கவுள்ள புதிய சிங்கப்பூர் பிரிமியர் லீக் பருவத்தில் இவ்விரு விளையாட்டாளர்களும் யங் லயன்சுக்குக் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குழுவில் இன்னொரு வெளிநாட்டு வீரரும் சேரக்கூடும். அவர் ஐரோப்பாவைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டக்காரராக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு வீரரான ஜுன், சென்ற பருவத்தில் அல்பிரெக்ஸ் குழுவின் அணித் தலைவராக இருந்தார். கன், 26 ஆட்டங்களில் ஐந்து கோல்களைப் போட்டு ஏழு கோல்களை உருவாக்கினார்.
பெரிதும் சிரமப்படும் யங் லயன்சை இருவரும் மீட்டெடுப்பர் என்பது நம்பிக்கை.

