ஹனோய்: தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான ஏஎஃப்எஃப் மிட்சுபிஷி இலெக்ட்ரிக் கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்றில் தாய்லாந்து, வியட்னாம் இரண்டும் ஒரே நிலையில் உள்ளன.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் இரு அணிகளும் இரண்டு முறை மோதும். விறுவிறுப்பாக அமைந்த முதல் ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் கோல் போட்டு வியட்னாமைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார் வூ வன் தன்.
இறுதிச் சுற்றின் இரண்டாம் ஆட்டம் நாளை நடைபெறும். இரண்டு ஆட்டங்களிலும் பதிவாகும் மொத்த கோல் எண்ணிக்கையைக் கொண்டு விருதை வெல்லும் அணி நிர்ணயிக்கப்படும்.
ஏஎஃப்எஃப் கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ள தாய்லாந்து ஏழாவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றும் இலக்கைக் கொண்டுள்ளது. கிண்ணத்தை இதுவரை இரண்டு முறை வென்றுள்ளது வியட்னாம்.

