செய்திக்கொத்து

3 mins read

கபில்தேவை முந்திய ஜடேஜா

நாக்பூர்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய ஆட்டக் காரர் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அரை சதமும் விளாசினார். இதன்மூலம், ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தியும் அரைசதமும் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவை முந்தியுள்ளார். ஐந்தாவது முறையாக இச்சாதனையைப் புரிந்து பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறினார் ஜடேஜா. நான்கு முறை அந்த மைல்கல்லைக் கடந்த கபில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ரோகித் சர்மா முத்தான சாதனை

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் விளாசினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு ஒன்பதாவது சதம். இதன் மூலம் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமையை ரோகித் தன்வயப்படுத்தினார். அனைத்துலக அளவில் இச்சாதனையைப் படைத்த 4வது அணித்தலைவர் அவர்தான். இதற்குமுன் பாபர் ஆசம் (பாகிஸ்தான்), ஃபாஃப் டு பிளஸ்ஸி (தென்னாப்பிரிக்கா), திலகரத்னே தில்ஷன் (இலங்கை) ஆகியோர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்: மந்தானா களமிறங்குவது சந்தேகம்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் மகளிர் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கின்றன. இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிரிதி மந்தானா இன்றைய போட்டியில் விளையாடுவது கேள்விக்குறிதான். ஆஸ்திரேலிய அணிக்கெதிராக கடந்த திங்கட்கிழமை நடந்த பயிற்சி ஆட்டத்தில் மந்தானாவிற்கு விரலில் காயமேற்பட்டது. அதிலிருந்து அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை எனக் கூறப்படுகிறது. தோள்பட்டைக் காயம் காரணமாக அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுரின் உடற்தகுதியும் அணிக்குக் கவலை தருவதாக உள்ளது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பங்ளாதேஷ், நியூசிலாந்து ஆகியவை 'ஏ' பிரிவில் உள்ளன. இறுதிப்போட்டி இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறும்.

3வது டெஸ்ட் போட்டி அரங்கம் கடைசி நேரத்தில் மாற்றப்படலாம்

தர்மசாலா: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ளது. முன்னர் அறிவித்த அட்டவணைப்படி, அவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா அரங்கில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கும். ஆனால், அவ்வரங்கம் அனைத்துலகப் போட்டியை நடத்த ஏற்புடையதாக இல்லை எனக் கூறப் படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்திற்குப் பின், அங்கு எந்தவொரு முதல்தரப் போட்டியும் நடத்தப் பட்டதில்லை. அவ்வரங்கில் புதுப்பிப்புப் பணிகள் இடம் பெற்று வருகின்றன. மழை காரணமாக அவை இன்னும் முடிவடையவில்லை. விரைவில் அவை முடிந்துவிடும் என்று இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்கம் நம்புகிறது. இல்லையேல், 3வது போட்டி வேறிடத்திற்கு மாற்றப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.